Tuesday, 27 September, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுஇடைக்கால வரவு செலவுத்திட்டம் - 2022 : முழு உரை

இடைக்கால வரவு செலவுத்திட்டம் – 2022 : முழு உரை

– 2021 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தினைத் திருத்துதல்
முன்னுரை 

இதுவரை காணப்பட்ட பொருளாதார போக்கினை மாற்றியமைப்பதற்கான அடித்தளத்தினை  இடுகின்ற  இடைக்கால  வரவு செலவுத்திட்டத்தினை  இன்று நாம்  பாராளுமன்றத்தில்  சமர்ப்பிக்கின்றோம். இன்றைய உலகத்துக்கேற்ற தேசிய பொருளாதார உபாயமொன்றினை உருவாக்குவதற்கான படிக்கல்லாக இது அமையும். ஒரு புதிய பொருளாதார கட்டமைப்பினை கட்டியெழுப்புவதற்கான அடித்தளமானது 2023 வரவுசெலவுத்திட்டத்துடன்  ஆரம்பமாகும். 
 
இடைக்கால  வரவு செலவுத்திட்டத்திற்கான முகவுரையான நான்கு  விடயங்களை  உங்களது  கவனத்திற்குக் கொண்டுவர நான்  விரும்புகின்றேன். 

பொருளாதார நெருக்கடி

பல்வேறு சந்தர்ப்பங்களில், தற்பொழுது நாம் எதிர்நோக்கி வருகின்ற பொருளாதார நெருக்கடியின் ஆழ அகலம் குறித்து நான் சுட்டிக் காட்டியுள்ளேன். இவ்வாறான மோசமான பொருளாதார வீழ்ச்சியொன்றினை அண்மைக்கால  வரலாற்றில் நாம் சந்தித்ததில்லை. இந்நாட்டின் மக்களில்  சிலர் இப் பிரச்சினைகளின்  பாரதூரத்தினை இன்னும் சரியாகப்  புரிந்து கொள்ளவில்லை. கஷ்டங்கள் மற்றும்  துன்பங்கள் பற்றி நாம் எடுத்துக் கூறியபோது அவர்கள் ஏளனம் செய்தனர். அவர்கள் நீர் கொதிக்கும்வரை பானையில் மகிழ்ச்சியில் நீந்தி விளையாடும் நண்டுகளைப் போன்றே  நினைத்துக் கொண்டிருக்கின்றனர். எனினும் அவர்களில் பொறுப்புடன் சிந்திக்கின்றவர்களும்  இருக்கின்றனர். அவர்கள் இந்த அழிவின் ஆழத்தினை அடையாளம் கண்டிருக்கின்றனர். இதனால் அவர்கள் எரிகின்ற தீயினை அனைப்பதற்கு முயல்வதுடன், அதற்காக அர்ப்பணிப்புடனும் செயற்படுகின்றனர். 

பொருளாதார நெருக்கடிக்கான காரணங்கள்

நாடு சுதந்திரத்திற்குப் பின்னர்  எழுபத்து நான்கு வருடங்கள் பின்னடைந்துள்ளது: என்பது இந்த நாட்களில் பொதுவாகக் கேட்கக்கூடிய பிரசித்தமான கோஷம் ஒன்றாகும். இந்த சுலோகங்களை இன்று  கோஷிக்கின்றவர்கள், நாட்டினை அழித்தது  காலணித்துவமாக்கல் என இதற்கு முன்னர் தொடர்ந்தும்  கூறிவந்தவர்களாவர். இதுதான் கோஷங்களினால்  வழிநடத்தப்படும் அரசியலின் யதார்த்தமாகும்.  அவர்கள் காலத்திற்குக்  காலம் தேவைக்கேற்ப தமது  சொந்த அரசியல்  நிகழ்ச்சி நிரல்களை திருப்திப்படுத்துவதற்காக  மாத்திரம் சுலோகமொன்றினை முன்வைத்தமை. எமது பொருளாதாரம்  சிதைவடைவதற்கான பிரதான காரணம், பொதுவான கொள்கைகளின் கீழ் முன்னோக்கிச் செல்வதற்குப்   பதிலாக அரசியல்  கோஷங்களினால்  வடிவமைக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளை பின்பற்றியமையாகும்.

குறுகிய நோக்குடைய இப்பொருளாதாரக் கொள்கைகளின்  காரணமாக, முன்னேற்றப் பாதையில் பயணித்த  நாடானது காலத்திற்குக்  காலம் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது.  அவ்வாறான பல தடுமாற்றங்கள் மக்களின் தேர்வுக்கான கற்பிதங்களாக மாறின. மக்களின் அவற்றினை எவ்வித மீளாய்வுமின்றி கொள்கைகளாக ஏற்றுக் கொண்டனர்.

தேசியமயமாக்கல் என்ற போர்வையில்  அரசாங்கம் தொழில் முயற்சிகளை தாமாகவே  தொழிற்படுத்துவதற்கு  ஆரம்பித்த  காலத்திலிருந்து  இன்றுவரை, எமது  நாட்டின்  வரி வருமானத்தில் பெரும்பகுதி இத்தொழில் முயற்சிகளின் நட்டங்களை ஈடுசெய்வதற்கே பயன்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் தேவைகளை நிறை வேற்றுவதற்காக ஒதுக்கீடு  செய்யப்படவேண்டிய  பணம் கம்பனிகளின்  பெயரில் வீணடிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் செய்யவேண்டியது என்னவெனில்,   கொள்கைகளை உருவாக்கி அவற்றினைச்  செயற்படுத்துவதேயாகும்.  இன்று அனைத்து  விடயங்களும்  அரசாங்கத்தினாலேயே செய்யப்படுகின்றது. மக்களும்  அனைத்து  விடயங்களையும்  அரசாங்கத்திடமிருந்தே  எதிர்பார்க்கின்றனர். 

அரச உடமை தொழில்முயற்சிகள் குறித்து மாத்திரமல்ல, வெளிநாட்டு  முதலீடு  தொடர்பான தகுந்த  கொள்கைகளைக்  கூட நாம் பின்பற்றவில்லை. காலம் முழுவதும் அத்தகைய வளங்களைப் பாதுகாத்தல் என்ற  சாக்குப்போக்கின் கீழ் நாட்டின்  வளப்பயன்பாடு உகந்த முறையில்  இடம்பெறவில்லை என்பதே உண்மையாகும். 

பொருளாதார நெருக்கடியினைத் தீர்த்தல்

பொருளாதார நெருக்கடியினைத் தீர்ப்பதில்  முக்கிய நடவடிக்கையொன்றாக  எமது பாரம்பரிய அரசியல் சித்தாந்தங்களை தூக்கியெறிந்துவிட்டு  அடிமட்ட மற்றும் உலகளாவிய அபிவிருத்திகளின்  யதார்த்தங்கள் பற்றி  புறநிலையாக சிந்தித்தல் வேண்டும்.

மக்கள் விடுதலை முன்னணியின் திரு. சுனில் ஹந்துன்நெத்தியினால் அண்மையில் தெரிவிக்கப்பட்ட கூற்றொன்றினை நான் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.  “அரசாங்கம் கொள்கைகளை உருவாக்குதல் வேண்டும். அரசாங்கம்  தொழில் முயற்சிகளை செயற்படுத்தக்கூடாது.”

இவ்விடயத்தில் புதிய உலக ஒழுங்கின் புதிய எண்ணக்கருக்கள் பற்றிய புதிய சிந்தனைகளை நாம் கொண்டிருப்போமாயின்,  பொருளாதார நெருக்கடியினைத்  தீர்ப்பதற்கு எம்மால்  முடியுமாகவிருக்கும். 

பொருளாதார நெருக்கடியினைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் 

ஒருவரை ஒருவர் விரல் நீட்டுவதன் மூலம் பிரச்சினைகளுக்கான தீர்வினை எட்ட முடியாது.  கடந்தகால நிகழ்வுகளை சபிப்பதன் மூலமும் அவற்றுக்கு தீர்வுகாண முடியாது. குறுகிய மற்றும் நீண்டகால திட்டங்களை பின்பற்றுவதனால் மாத்திரமே இந்நெருக்கடிக்கு  தீர்வுகாண முடியும். 

அவை தொடர்பான குறுகிய திட்டங்களை நாம் தற்பொழுது செயற்படுத்தி  வருகின்றோம். சர்வதேச நாணய நிதியத்துடனான கலந​துரையாடல்கள் வெற்றிகரமாக அதன் இறுதிக் கட்டத்தினை அடைந்துள்ளது.  படுகடன் மீள் கட்டமைப்பு தொடர்பாக எமது நாட்டுக்கு நிதி உதவியினை வழங்குமாறு பிரதான  பொருளாதார  நாடுகளுடன் நாம் பேச்சுவார்த்தை நடாத்தி வருகின்றோம். ஐக்கிய நாடுகள் சபையினால் வழிநடாத்தப்படுகின்ற சர்வதேச நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் உணவுப்  பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கான நிகழ்ச்சித்திட்டமொன்றினை  நாம் செயற்படுத்தி  வருகின்றோம்.    திரவ பெற்றோலிய வாயு,  மின்சாரம் மற்றும்  எரிபொருள் உள்ளடங்களான அன்றாட தேவைகளை தடையின்றி வழங்குவதற்கான செயன்முறைகள்  ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாம் பாடசாலைகளை மீள ஆரம்பித்துள்ளோம். பல்கலைக்கழகங்களும்  தற்பொழுது  திறக்கப்பட்டு  வருகின்றன. 

இந்த அனைத்து நடவடிக்கைகளிலிருந்தும் குறுகிய காலத்திட்டத்தில் நாம் தற்பொழுது  சரியான பாதையில் பயணிக்கின்றோம்  என்பது தெளிவாகின்றது. 

எனினும் இதன்மூலம் நாம் திருப்தியடைய முடியாது.  ஏறக்குறைய 25 வருடங்களுக்கு செயற்படுத்தக்கூடிய  தேசிய பொருளாதாரக் கொள்கை ஒன்றினை நாம் உருவாக்குதல் வேண்டும்.  அப்பொழுதே எமது கொள்கையினை எவ்வித தடையுமின்றி  நாம் செயற்படுத்த முடியும். நான் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போன்று இந்த இடைக்கால  வரவு செலவுத்திட்டமானது தேசிய பொருளாதாரக்   கொள்கைக்கான அத்திவாரமாக இருக்கும்.  2023 வரவு செலவுத்திட்டத்தினூடாக  தேசிய பொருளாதாரக்   கொள்கையொன்றினை உருவாக்குவதற்கு   நாம் எதிர்பார்க்கின்றோம்.

இந்த இடைக்கால வரவுசெலவுத்திட்ட உரையானது, சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடுகள் மற்றும் 2023 வரவு செலவுத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படவுள்ள பொருளாதார உறுதிப்பாடு மற்றும் புத்துயிரளிப்பு என்பவற்றுக்குத் தேவையான வேலைச் சட்டகத்தையும் தயாரித்துள்ளது. 

சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடல் நிறைவுற்றதுடன், அது பற்றிய தகவல்களை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கு நான் எதிர்பார்க்கின்றேன்.

பொருளாதார நெருக்கடி, பொருளாதார  நெருக்கடிகளுக்கான  காரணங்கள்,  பொருளாதார   நெருக்கடிகளுக்கு  தீர்வு காணல்  மற்றும்  பொருளாதார  நெருக்கடிகளை  தீர்ப்பதற்கான வழிகள் என்ற விடயங்களை,  தற்பொழுது நாம் சுருக்கமாகக் கலந்துரையாடினோம். தற்பொழுது நான் இடைக்கால  வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளை உங்கள் முன் சமர்ப்பிப்பதற்கு  விரும்புகின்றேன்.   

பேரண்ட அரசிறை வேலைச்சட்டகம் 

2021 இன் இறுதியளவில் மொ.உ. உற்பத்தியில் 8.2 சதவீதமாகக் காணப்பட்ட  அரசாங்கத்தின்  வருமானத்தினை, 2025 இல் 15 சதவீதம் வரை அதிகரிப்பதற்கு எமது அரசிறை உறுதிப்படுத்துகை நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்டுகின்றது.

அரசாங்கம் 2025 இல் ஆரம்ப மிகையினை மொ.உ.உற்பத்தியில் 2 சதவீதமாக இலக்கிட்டுள்ளதுடன் நடுத்தர காலத்தின்போது இம்மட்டத்தினை மேலும் மேம்படுத்துவதற்கும் எதிர்பார்க்கப்டுகின்றது.

2021 இன் இறுதியில் காணப்பட்ட மொ.உ.உற்பத்தியின் 110 சதவீதத்திலிருந்து 2032 அளவில் மொ.உ.உற்பத்தியில் 100 சதவீதத்தினை விஞ்சாத வகையில் அரசாங்கத்துறை படுகடனைக் குறைப்பதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம். 

நடுத்தர காலத்தில் பணவீக்கத்தினை நடு ஒற்றை இலக்கமொன்றுக்கு கட்டுப்படுத்தும் வகையில் குறைப்பதற்கு  எதிர்பார்க்கப்படுகின்றது.  

அத்துடன் வட்டி  வீதமும் குறைந்த /சாதகமான வட்டி வீதமாக குறையுமென நாம் எதிர்பார்க்கின்றோம்.

பேரண்டப் பொருளாதார நம்பிக்கை மீண்டும் தாபிக்கப்பட்டதன்  பின்னர் வெளிநாட்டு செலாவணி ஒதுக்குகள் வெளிநாட்டு நிதி  வழங்கலினூடாக மீண்டும்  அதிகரித்ததன் பின்னர் நாணய மாற்று வீதங்கள் மீதான மோசமான அழுத்தமும் குறைவடையுமென நாம் எதிர்பார்க்கின்றோம்.

பொருளாதார வளர்ச்சியினை அதிகரிப்பதற்கான கட்டமைப்பு மறுசீரமைப்புகளை செயற்படுத்துவதினூடாக  நடுத்தரகால பொருளாதார வளர்ச்சியானது 5 சதவீதத்தினை மீண்டும் அடையமுடியுமென எதிர்பார்க்கப்படுகின்றது. 

இடைக்கால வரவு செலவுத்திட்டத்தின்  பிரதான விடயங்கள் 

இந்த இடைக்கால வரவு செலவுத்திட்டமானது 2022 சனவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட கொள்கைப் பொதிக்கான வசதியேற்பாடுகளை உள்ளடக்கியுள்ளதுடன்,  சமூக நலன்புரி  பாதுகாப்பு வலைகளை (Social Safety Nets) அதிகரிப்பதற்கான ஒதுக்கீடுகள், 2022 இல் அதிகரித்த வட்டிக் கொடுப்பனவு  காரணமாக ஏற்பட்ட மேலதிகச் செலவினம், உலக வங்கி மற்றும்  ஆசிய அபிவிருத்தி வங்கி  என்பவற்றினால் தற்போதுள்ள கருத்திட்டங்களை மீள் நோக்கப்படுத்தி​  பெற்றுக்கொள்ளப்பட்ட வெளிநாட்டு உதவிகள் மற்றும் அதிகரித்த உரமானியம் என்பவற்றுக்கான நிதி ஏற்பாடுகளையும்  உள்ளடக்கியுள்ளது. 

நான் இதற்கு முன்னர்  வாக்குறுதியளித்ததன்  பிரகாரம்,  இந்த செலவினங்களை ஈடு செய்யும் வகையில்  2022 வரவு செலவுத்திட்டத்தில் ஏறக்குறைய ரூபா 300 பில்லியன்  மூலதனச் செலவினத்தினை நீக்குவதற்கு  நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். 

வருமான முன்மொழிவுகள் 

வருமான வரி, பெறுமதி சேர்க்கப்பட்ட வரி, தொலைத் தொடர்பாடல் அறவீடு, பந்தய மற்றும் சூதாட்ட அறவீடு என்பன தொடர்பில் பல்வேறு வரி மறுசீரமைப்புகளினை  செயற்படுத்துவதற்கான அங்கீகாரம் தற்பொழுது கிடைக்கப் பெற்றுள்ளதுடன்  வரி தொடர்பான சில முன்மொழிவுகள் தற்பொழுது செயற்படுத்தப்பட்டுள்ளன. 

இதற்கு மேலதிகமாக, 2022 செப்டம்பர் 1 ஆந் திகதி முதல் செயற்படுத்தப்படும் வகையில், பெறுமதி சேர்க்கப்பட்ட வரி 12 சதவீதத்திலிருந்து 15 சதவீதம் வரை  அதிகரிக்கப்படும்.

2022 மே மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அதிக வருமான முன்மொழிவுகள் 2022 ஒக்டோபர் 1 ஆந் திகதியிலிருந்து செயற்படுத்தப்படும்.

இந்த  முன்மொழிவுகளினைச் செயற்படுத்துவது   வருமான அதிகரிப்புக்கு  உதவியாக அமையும். இதன் மூலம் அரசாங்கத்தின் செலவினத்திற்காக பணம் அச்சிடுதலையும் படிப்படியாகக் குறைக்க  முடியும்.  

மேற்குறித்த முன்மொழிவுகளிலிருந்து  கிடைக்கின்ற வருமானமும் 2022 ஒதுக்கீட்டுச்  சட்டத்திற்கான திருத்தத்தில் சமர்ப்பிக்கபட்ட வருமான மதிப்பீடுகளின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளது. 

இதற்கு மேலதிகமாக 2023 வரவு செலவுத்திட்டத்தினை இலக்காகக் கொண்டு  புதிய வருமான அதிகரிப்பு முன்மொழிவுகளைச்   சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.   

வரி நிர்வாகம் 

வருமானத்தினை அதிகரிப்பதற்கான எமது முயற்சிகளில், வரி சேகரிப்பு வினைத்திறனை அதிகரிப்பதற்கும்  வரித் தவிர்ப்பினைத் தடுப்பதற்கும் வரி நிர்வாகம்  மிகவும் முக்கிய பங்களிப்பினைச் செய்ய வேண்டுயுள்ளது. 

தற்பொழுது  காணப்படுகின்ற தேவைப்பாடுகளுக்கு மேலதிகமாக,  வருடாந்த வருமானம் மற்றும் வரி விடுவிப்பு  எல்லையினைக் கருத்திற் கொள்ளாது 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வதிவாளர்களுக்கும் கட்டாய வரிப் பதிவொன்றினை அறிமுகப்படுத்துவதற்கு நான் முன்மொழிகின்றேன்.

இலங்கை சுங்கம் தொடர்பான சனாதிபதி  விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் பரிந்துரைகளைச் செயற்படுத்துவதற்கு அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது. இலங்கை சுங்கத்தின் பொறுப்புக்களை வினைத்திறனுடனும்  பயன்வலு மிக்கதாகவும் செயற்படுத்துவதற்கு அதன் நிறுவன,  நிர்வாக மற்றும் தொழிற்பாட்டுச் செயற்பாடுகள் இதன் மூலம்  உள்ளடக்கப்பட்டுள்ளது. 

வரியல்லாத வருமானம் 

9.1 தேசிய பொருளாதார நலன் மற்றும் வளங்களின் நிலைபேறான பயன்பாட்டுக்கு  எவ்வித பாதிப்புமின்றி, எமது கனிய வளங்களை  மிகவும் சிறந்த வகையில் பயன்படுத்துவதனை உறுதிப்படுத்துவதற்கு உயர் தொழில் நுட்பங்களுடன் கூடிய கைத்தொழில் முதலீடுகள் தொடர்பாக இலங்கைப் பங்காளர்களுடன் இணைந்த தொழில் முயற்சிகளைத் தாபிப்பதற்கு  வெளிநாட்டு  முதலீட்டாளர்கள் மற்றும் /அல்லது தொழில்நுட்பத்தினைக் கொண்டவர்களை கவர்வதற்குத்  தேவையான  நடவடிக்கைகளை எடுப்பதற்கு நான் முன்மொழிகின்றேன். 

செலவினத்தினை முகாமை செய்தல் 

மூலதன செலவின கருத்திட்டங்களுக்காக மிகவும் விவேகமான மற்றும் சான்றினை அடிப்படையாகக்  கொண்ட  முன்னுரிமைப்படுத்தல் பொறிமுறையொன்றினை உருவாக்குவதற்கு தற்பொழுது  நடவடிக்கை எடுக்கப்பட்டு  வருகின்றது.  கல்வி, சுகாதாரப் பராமரிப்பு, பொதுப் பாதுகாப்பு, அரசாங்க சேவை டிஜிற்றல் மயமாக்கல்  மற்றும் சமூகப் பாதுகாப்பு போன்ற முன்னுரிமைத்   துறைகளுக்கு நிதியளிக்கப்படும்.

வினைத்திறன் மிக்க செலவின முகாமைத்துவத்திற்கு மிகவும் சிறந்த மற்றும் உறுதியான மேற்பார்வை அவசியமாகும்.  இவ் வகையில், அரசாங்க செயன்முறை  சிறந்த முறையில், அது செயற்பட வேண்டிய வகையில் செயற்படுவதனை  உறுதிப்படுத்துகின்ற பொறுப்பினைக் கொண்ட,  ஐக்கிய அமெரிக்காவில்  காணப்படுகின்ற  கண்காணிப்பாளர் நாயகம் (Inspector General)  போன்ற முறைமையொன்றினை தாபிப்பதற்குத்  தேவையான சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கும் நான் முன்மொழிகின்றேன். அரசாங்க நிறுவனங்களில் மோசடி,  வீண் விரையம் மற்றும் துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவதனை தடுப்பதுடன் அவற்றினை இனங்காண்பதன் மூலம்  அரசாங்கத்தின் நன்மதிப்பினைப்  பாதுகாப்பதற்கு இந்த கண்காணிப்பாளர்  நாயகம்  அதிகாரமளிக்கப்படுவதுடன் தீவிரமாக செயற்படுதலும் வேண்டும். 

உகந்த முறையில் பயன்படுத்தல் மற்றும் வருமானம் ஈட்டக்கூடிய செயற்பாடுகளுக்குப் பொருத்தமான சொத்துக்களை இனங்காணும்  நோக்கத்துடன் அரசாங்கத்திற்குச்  சொந்தமான கட்டிடங்கள் மற்றும் காணிகள்  தொடர்பில் விரிவான  கணக்காய்வு மேற்கொள்ளப்படுதல் வேண்டும். 

தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி  மன்றங்களை ஒன்றிணைத்தல் 

தற்பொழுது நாட்டில் 341 உள்ளூராட்சி  மன்றங்கள் செயற்படுவதுடன்,  24 மாநகர சபைகள், 41 நகர சபைகள் மற்றும் 276 பிரதேச சபைகள்  இவற்றுள் உள்ளடங்குகின்றன.  இந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கிடையே  வருமான மூலங்களைக் கொண்ட பல  உள்ளூராட்சி மன்றங்கள் காணப்படுவது போன்று போதியளவு  வருமான மூலங்கள் காணப்படாத  உள்ளூராட்சி  மன்றங்களும் உள்ளன  என்பது அவதானிக்கப்பட்டுள்ளது. இதனால், மிகவும் வினைத்திறன் மிக்க மக்கள் சேவையினை வழங்குதல் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை இலகுபடுத்துவதற்காக ஆரம்பக் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட பிரதேச சபைகள்  சிலவற்றினை அவற்றுக்கு அண்மையில் அமைந்துள்ள நகர சபை அல்லது மாநகர சபையுடன் ஒருங்கிணைக்கப்படும்  இத்திட்டத்தின் கீழ் 22 பிரதேச சபைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. அவ்வாறான உள்ளூராட்சி மன்றங்களின் விபரம் பின்னிணைப்பு V​II இல்  தரப்பட்டுள்ளது. 

மக்களுக்கான சேவையினை இலகுவாகவும் வினைத்திறனுடனும் வழங்குவதற்கும்  உரிய வருமானத்தினை துரிதமாக சேகரிப்பதற்கும்  நிகழ்நிலை வசதிகளை (Online  Services) வழங்குவதற்கு அனைத்து உள்ளூராட்சி   மன்றங்களும்  நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.  2022 ஆம் ஆண்டு நிறைவடைவதற்கு முன்னர் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் இவ்வாறான நிகழ்நிலை வசதியுடைய வருமான சேகரிப்பு முறைமை செயற்படுத்தப்படுதல் வேண்டும்.

பல்வேறு நோக்கங்களுக்காக  தாபிக்கப்பட்டுள்ள கருத்திட்ட அலுவலகங்கள் மற்றும் கருத்திட்ட அலகுகளில் குறிப்பிடத்தக்களவு எண்ணிக்கையிலான பதவியினர் மற்றும் உயர்ந்த கொடுப்பனவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதனால் அவற்றினது செயற்பாடுகளினை மீளாய்வு செய்வது முக்கியமானதாகும்.  எனவே, அவற்றினால் எதிர்பார்க்கப்பட்ட நோக்கம்  நிறைவேற்றப்படுகின்றதா என்பதுடன் அவ்வாறான நிறுவனங்கள் தொடர்ந்து செயற்படுத்தப்படவேண்டிய தேவை காணப்படுகின்றதா என்பதை மீளாய்வு செய்வதற்கும் மூன்று மாத காலத்திற்குள் அமைச்சரவைக்கு அது தொடர்பான சிபாரிசினை சமர்ப்பிப்பதற்கும் குழு ஒன்றினை நியமிப்பதற்கு நான் முன்மொழிகின்றேன்.

அரசதுறை மறுசீரமைப்பு

வினைத்திறன்மிக்க செலவு முகாமைத்துவத்தின் ஒரு பகுதியாக அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கையினை சீர்செய்வதற்கு நான் முன்மொழிகின்றேன்.  இதன் முதற்கட்டமாக 5 வருட காலத்திற்கு சம்பளமற்ற   விடுமுறையினைப் பெற்றுக்கொண்டு வெளிநாடு செல்வதற்கு அல்லது பல்வேறு  பொருளாதார  நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு   விரும்புகின்ற அரசாங்க ஊழியர்களுக்கு நாம் தற்பொழுது  அனுமதி வழங்கியுள்ளோம்.

அரசாங்க சேவையிலுள்ள பதவியினரின் ஓய்வூதியம் பெறும் வயதினை 65 வரையும் பகுதியளவு அரச  சேவையிலுள்ள அலுவலர்களின் ஓய்வூதியம் பெறும் வயதினை 62 அதிகரித்ததனால் சமூகத்தில் வேலையற்ற இளைஞர்களின் விரக்திநிலை அதிகரித்துவருகின்றமை தெரியவந்துள்ளது. அதே போன்று, பெரும்பாலான  பதவிகளில்   பதவியுயர்வு வழங்குகின்றபோது ஓய்வூதியம் பெறும் வயது அதிகரித்ததன் மூலம் பதவியுயர்வினை எதிர்பார்த்துள்ள பெரும் எண்ணிக்கையிலான அலுவலர்களுக்கு அச்சந்தர்ப்பத்தினைப் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளது. 

எனவே, இந் நிலையினை சீர்செய்வதற்கு ஓய்வூதியம்  பெறும் வயது 60 ஆகக்  குறைக்கப்படுகிறது.  அதேபோன்று,  தற்பொழுது  அரசாங்க மற்றும் பகுதியளவு அரச  சேவையிலுள்ள 60 வயதினை பூர்த்தி செய்து பணியில் ஈடுபட்டு  வருகின்ற அனைத்து  அரசாங்க மற்றும் அரச சார்பு ஊழியர்கள் 2022.12.31 ஆந் திகதிமுதல் பயன்வலுப்பெறும் வகையில் ஓய்வுறுத்தப்படுவர். 

அரசு நிறுவனங்களில் அடிப்படை நிலை ஊழியர்களின் சேவைகளை சிறந்த முறையில் பெறுவதற்காக முழு அரச சேவையையும் உள்ளடக்கிய வகையில் பணி ஆய்வு (Work- Study) ஒன்றினை 3 மாதத்திற்குள் மேற்கொண்டு அதன் அறிக்கையினை சிபாரிசுகளுடன் அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பதற்கு முகாமைத்துவ சேவை திணைக்களப் பணிப்பாளர் நாயகம் பணிக்கப்படுவார்.

அரசாங்கத்தின் கொள்கை என்ற வகையில், உயிர்ச்சுவட்டு எரிபொருளினைப் பயன்படுத்தி இயங்குகின்ற  வாகனங்களை அரச துறைக்கான கொள்வனவு செய்தல் இதன் பின்னர் இடைநிறுத்தப்படுகின்றது.

எதிர்காலத்தில் அரச துறையின்  பயன்பாட்டுக்காக மின்வலுவினைக் கொண்ட  வாகனங்கள் மாத்திரம்  கொள்வனவு செய்யப்படும்   என்பதுடன் தனியார்  துறையினரும்  மின்சார  வாகனங்களைப் பயன்படுத்துவதற்கு  ஊக்குவிக்கப்படுவர். 

அரச துறைக்காக வாகனங்களை கொள்வனவு செய்யும் போது  வாகனத்தின்   வினைத்திறன்  மற்றும் விலைகளை  அடிப்படையாகக் கொண்டு பொருத்தமான வாகன வகைகளைத் தீர்மானித்தல்  வேண்டும். இந்த முன்மொழிவு  கட்டம் கட்டமாக செயற்படுத்தப்படுவதுடன்  2026 சனவரி 01 இல்  முழுமைப்படுத்தப்படும்.

தேசியப் பாதுகாப்பு – 2030

பூகோள ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த நாடொன்று என்ற வகையில் இலங்கை அனைவருடனும்  இணைந்து செயற்பட வேண்டுமென்பதுடன் எழுகின்ற யதார்த்தங்களுக்கு முகங்கொடுப்பதற்கு எமது  பாதுகாப்புத் துறைசார்ந்த கொள்கைகளினை  திட்டமிடுதலும் வேண்டும்.

இதனால், இந்நோக்கத்தினை அடைந்து கொள்வதற்கும் நவீன மற்றும் மாற்றமடைந்து வருகின்ற உலகத்திற்கு ஏற்றவகையில் எமது பாதுகாப்புத் துறையினை தயார்படுத்துவதற்காக “தேசியப் பாதுகாப்பு – 2030” எனப்படும் மீளாய்வொன்றினை மேற்கொள்வதற்கு  நான் முன்மொழிகின்றேன். 

அரசுடைமை தொழில் முயற்சிகள் 

அரச துறை மறுசீரமைப்புகளில் மற்றுமொரு  தீர்க்கமான விடயம் என்ற வகையில்,  அரச உடைமை தொழில் முயற்சிகளை முகாமைத்துவம்  செய்வதாகும். பிரதான அரச உடைமை தொழில் முயற்சிகள் சிலவற்றுக்கு பாரிய  அரசிறை ஆபத்து  ஏற்பட்டுள்ளது. அவற்றில், எரிசக்தித் துறையில் இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை  பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினையும், போக்குவரத்துத் துறையில் ஶ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தினையும் விசேடமாக குறிப்பிட முடியும். இந்த நிறுவனங்கள் குறிப்பிடத்தக்களவு நட்டம், எதிர்மறையான பங்குரிமை மூலதனம் (ஶ்ரீ லங்கன் விமான சேவை/இலங்கை  பெற்றோலியக் கூட்டுத்தாபனம்)  மற்றும் குறிப்பாக அரச வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய பெருமளவிலான கடன் சுமைக்கு உட்பட்டு குறிப்பிடத்தக்களவு ஆபத்தினை நிதித் துறையில் உருவாக்கியுள்ளது.

அரசுடைமை தொழில் முயற்சிகளின் பங்கு விலக்கல் தொடர்பிலான  வெற்றிகரமான நிகழ்ச்சித்தமொன்றின்  மூலம் வரி செலுத்துநர்கள் மற்றும் நிதி முறைமை மீதான சுமையினை குறிப்பிடத்தக்களவு இலகுபடுத்த முடியும்.  அதேபோன்று, பொருளாதாரத்தினை துரிதமாக மீள் எழுச்சி பெறச் செய்வதற்கான வழிகாட்டல்களை வழங்குவதன் மூலம் கடனற்ற வெளிநாட்டு  ஒதுக்குகளை உருவாக்குவதற்கும் உதவ முடியும்.  இதற்காக நிதி அமைச்சில் “அரசுடைமை தொழில் முயற்சிகள் மீள்கட்டமைப்பு அலகு”  இனைத் தாபிப்பதற்கு நான் முன்மொழிகின்றேன். இதற்காக ரூபா 200 மில்லியனை  ஒதுக்கீடு செய்வதற்கு  நான் முன்மொழிகின்றேன். 

மறுசீரமைப்பு  செய்யப்படுவதற்கு பல்வேறு  முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ள  இலங்கை மின்சார சபை, இலங்கை பெற்றோலியக்  கூட்டுத்தாபனம் மற்றும்  ஶ்ரீ லங்கன் விமான சேவை  நிறுவனம் தவிர்ந்த பிரதான 50 தொழில் முயற்சிகளுக்கான இலக்குகளை நெருக்கமாக  அவதானிப்பதற்கான நிறுவன அபிப்பிராய கூற்றினை (Statement of Corporate intent) அறிமுகப்படுத்தி மீண்டும் செயற்படுத்துவதற்கு நான் முன்மொழிகின்றேன்.

அரசுடைமை தொழில் முயற்சிகள் தொடர்பான இந்த கடினமான ஆனால் அத்தியவசியமான நடவடிக்கைகள் சவால் மிக்கவை என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும் அவ்வாறு செய்யத் தவறுகின்றமை பேரழிவினை ஏற்படுத்தும்  ஆபத்து மிக்கதாகும். குறிப்பாக நிதித்துறையின் ஸ்திரத் தன்மையில் பாதிப்பினை ஏற்படுத்துவதில்  எதிர்காலத்தில்  இதனைவிட  பாரிய வரிச் சுமையினை மக்கள் சுமக்க வேண்டி நேரிடும்.

அரசிறை  சட்டவாக்க / மேற்பார்வைச்சட்டகம்  

முன்வைக்கப்பட்டுள்ள அரசிறை மறுசீரமைப்புகளானது எமக்கு அன்னியமானவையல்ல  இப் பிரச்சனைகள் நீண்டகாலமாக  அவதானிக்கப்பட்டுள்ளதுடன் 2019 வரை  இலங்கை இவ்வாறான பல மறுசீரமைப்புகளை செயற்படுத்தி   அரசிறை உறுதிப்பாட்டினை நோக்கிய பாதையில் பயணித்துள்ளது.  ஆயினும், துரதிஷ்டவசமாக  இவ்வாறான மறுசீரமைப்புகள் பின்னோக்கிச் சென்றுள்ளதுடன், அதனால் இன்றுநாம் எதிர்நோக்கியுள்ள நிலைமைக்கு பொருளாதாரம்  வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்கு வேறு மாற்றுவழியொன்று இல்லை. எதிர்கால மற்றும் தற்பொழுது  வாழ்கின்ற இளம் சந்ததியினரின் நலனைக் கருத்திற் கொண்டு இந்த மறுசீரமைப்புகளை கட்டாயம் செயற்படுத்தவே வேண்டியுள்ளது. 

எனவே, இன்று எம்மால் செயற்படுத்தப்படுகின்ற எவ்வாறான மறுசீரமைப்பாயினும், நாம் அனைவரும் காண்பதற்கு எதிர்பார்க்கின்ற பொருளாதாரத்தினை  மீளெழுச்சி பெறச் செய்வதனை  தடம் புரளச் செய்கின்ற குறுகிய நோக்கங்களிலிருந்து  பாதுகாப்பது  அத்தியவசியமானதாகும்.  இதற்காகவேண்டி  உறுதியான அரசிறை விதிகளை (Fiscal rules) உள்ளடக்கிய  அரச நிதி முகாமைத்துவ சட்டம் (Public Finance Management Act) ஒன்றின் கீழ்  புதிய சட்டவாக்கங்களை நாம் அறிமுகம் செய்ய வேண்டியுள்ளது.

அரச வருமானத்தினை அதிகரிப்பதற்கு தேவையான முன்மொழிவுகளை பரிந்துரைப்பதற்கும் அதுதொடர்பான பிரச்சனைகளை கண்காணிப்பதற்குமான வழிவகைகள் மற்றும் வழிமுறைகள் பற்றிய பாராளுமன்ற குழுவினை (Parliamentary Committee on Ways and Means)  தாபிப்பதற்கு  நான் முன்மொழிகின்றேன்.

அரசாங்க நிறுவனங்களிலுள்ள பயன்படுத்தப்படாத  பொருட்களை அகற்றுதல்

பெரும்பாலான அரசாங்க நிறுவனங்களில் பயன்படுத்தப்படாத  அதிகளவிலான பொருட்கள் குவிந்து காணப்படுவதுடன்,  அவற்றினை அகற்றுதல் / நீக்குதல் நீண்டகாலமாக மேற்கொள்ளப்படாததினால்  குறித்த பயன்படுத்தப்படாத பொருட்களினை விற்பனை  செய்து  அரசாங்கத்திற்கு  கிடைக்க வேண்டிய  அதிகளவான இலாபம் இல்லாமற் போகின்றது.

இதனால், பயன்படுத்தப்படாத பொருட்களை அகற்றுவது தொடர்பான  அனைத்து செயற்பாடுகளையும் கண்காணித்து  செயற்படுத்துவதற்காக பொதுத்திறைசேரியின் கொம்ப்ரோலர் நாயகமும்  உள்ளடங்கும்  வகையில் அரசாங்க ஊழியர்கள்  மூன்று பேரைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்படும்.

கடன் முகாமைத்துவம் தொடர்பில் விசேட  கவனத்தினைச்  செலுத்தி  தற்பொழுது  இலங்கை மத்திய வங்கி,  திறைசேரி  செயற்பாடுகள் திணைக்களம், வெளிநாட்டு வளங்கள் திணைக்களம், தேசிய வரவு செலவுத்திட்ட திணைக்களம்  என்பவற்றின் கீழ் மேற்கொள்ளப்படுகின்ற கடன் முகாமைத்துவ செயற்பாடுகளுக்காக சுயாதீனமாக செயற்படக்கூடிய தேசிய கடன் முகாமைத்துவ நிறுவனம் (National Debt Management  Agency – NDMA) பொதுத்திறைசேரியின் கீழ் தாபிக்கப்படும்.

அரசாங்க மற்றும் தனியார் துறை பங்குபற்றுநர்களினால் மேற்கொள்ளக்கூடிய முதலீட்டு வாய்ப்புகளை இனங்காணுதல் மற்றும் முதலீட்டு  ஊக்குவிப்புக்கான வசதிகளை வழங்குவதற்காக அரசாங்க மற்றும் தனியார் பங்குபற்றுகையுடன் கூடிய தேசிய நிறுவனம் (National Agency for Public  Private Partnership- NAPP) ஒன்று  தாபிக்கப்படும். இம் முன்மொழிவினைச் செயற்படுத்துவதற்காக ரூபா 250 மில்லியன்  ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. 

நாணய  மற்றும் நிதித்துறை 

நாட்டின் நாணயத்துறையினை  வலுப்படுத்துவதற்கான பிரதான சட்டவாக்கமாக புதிய மத்திய வங்கிச் சட்டம் செயற்படுத்தப்படும். இச்சட்டம் உருவாக்கப்படுவதன் மூலம், பணவீக்கத்தினை  இலக்கிடுதல் மற்றும் வரவு செலவுத்திட்ட பற்றாக்குறைக்கு மத்திய வங்கியின் மூலம் நிதி அளிப்பதனை  – அதாவது, பொதுவாக அறியப்பட்ட பணம் அச்சிடுதலைத் தடுத்தல் என்பவற்றுக்கான சட்ட ஏற்பாட்டினை வழங்குகின்றது.

புதிய சட்டத்தின் மூலம் மத்திய வங்கியின் நாணயக் கொள்கைத் தீர்மானங்கள் அரசியல் மயப்படுத்தப்படுவதும் தடுக்கப்படுகின்றது.

ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டவாறு, 2019  ஆம்  ஆண்டில் இச் சட்டம் உருவாக்கப்பட்டிருக்குமேயானால் இன்று நாம் காண்கின்ற உயர் பணவீக்கத்தினை அனுபவிக்காதிருக்க முடிந்திருக்கும்.

அரசாங்க வங்கிகளின் மொத்த பங்குரிமைகளில்  20 சதவீதத்தினை குறித்த வங்கிகளின் வைப்பாளர்கள் மற்றும்  ஊழியர்களுக்கு வழங்குதல்

பொருளாதார நெருக்கடி, வட்டி விகித அதிகரிப்பு, கடன் மீள் அறவீட்டில் சிரமம், கடன் பெற்ற தொழில் முயற்சிகள்  எதிர்நோக்கிய பிரச்சினைகளினால் இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி  என்பவற்றுக்கு  ஏற்பட்ட பாதிப்பினை குறைப்பதற்கும்  இரண்டு வங்கிகளினதும் திரவத்தன்மை பிரச்சினைகளை குறைக்க புதிய மூலதன வசதியினை வழங்க வேண்டியுள்ளதால்  குறித்த இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி  உரித்துடைய முழு பங்குகளில் 20 சதவீதத்தினை வங்கிகளின் வைப்பாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் வழங்குவதற்கு முன்மொழியப்படுகிறது. 

அரச நிதியீட்டம் மிகவும்  குறைவாகக்  காணப்படுவதனால் அரச வங்கிகளுக்கு மேலதிக மூலதனத்தினை வழங்குவதற்கு  இச்சந்தர்ப்பத்தில் அரசாங்கத்திற்குள்ள  வாய்ப்பு வரையறுக்கப்பட்டுள்ளது  என்பதை குறிப்பிட விரும்புகின்றேன்.

சமூக நலன்புரி 

சமூக நலன்புரிச் சட்டம்  2002 இல் சட்டமொன்றாக உருவாக்கப்பட்டது. ஆயினும் இதுவரை முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. சமூக நலன்புரிச்சபை  தற்பொழுது செயற்படுத்தப்பட்டுள்ளதுடன் தரவுத் தளம் அல்லது  சமூகப் பதிவகம் ஒன்றினைத் தாபிப்பதற்கு தரவு சேகரிப்பு செயன்முறை  தற்பொழுது  முன்னெடுக்கப்படுகின்றது.  பக்கச்சார்பற்ற ஊர்ஜிதப்படுத்தக்கூடிய அளவுகோல்களின் மூலம் பயன்பெறுநர்களை அடையாளங் காண்பதற்கான புதிய பொறிமுறையொன்றும்  தாபிக்கப்பட்டுள்ளது. இது வெளிப்படைத் தன்மையான சட்டங்கள் மற்றும் முறைமைகள் செயற்படுத்தப்படுவதனை உறுதிப்படுத்தும். இச்செயன்முறை  நிறைவுற்றதுடன் நலன்புரி நிகழ்ச்சித்திட்டங்கள் மிகவும்  சிறந்த முறையில் இலக்கிடப்படுவதுடன் பயனாளர்களின்  வங்கிக்  கணக்குகளில் நேரடியாக பணத்தினை வைப்புச் செய்வதற்கும்  முடியுமாகவிருக்கும்.

தற்பொழுது நிலவுகின்ற நெருக்கடிகளினால், பெரும்பாலானோர்  எதிர்நோக்குகின்ற சிரமங்களை நான் நன்கு அறிவேன். இதனால்தான் மூலதனச்  செலவினத்தினைக் குறைத்து பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு  அதிகரித்த  சலுகையினை வழங்குவதற்கு நான்  தீர்மானித்துள்ளேன். 

நீங்கள் அறிந்த வகையில், வேலை இழப்பு, விவசாய உற்பத்திகளின் வீழ்ச்சி மற்றும் பல்வேறு  காரணங்களினால்  பயிர்ச்செய்கை மேற்கொள்ள முடியாமை போன்றவற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர உதவியாக மேலதிக மாதாந்தக்  கொடுப்பனவினை வழங்குவதற்கு  2022 மே முதல்  யூலை மாதம் வரை  மேலதிகமாக ரூபா 31,000 மில்லியனை அரசாங்கம் செலவிட்டுள்ளது. 

 மேற்குறித்த பாதிப்புகளுக்குட்பட்டவர்கள்  மீதான பொருளாதார  நெருக்கடியினால் ஏற்படும் அழுத்தத்தினைக் குறைப்பதற்கு 2022 ஆம் ஆண்டில் எதிர்வரும் நான்கு  மாதங்களுக்கு இந் நிகழ்ச்சித்திட்டத்தினைத் தொடர்ந்தும்  செயற்படுத்துவதற்கு  நான் முன்மொழிகின்றேன். 

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு  தற்பொழுது  வழங்கப்படும்  20,000 ரூபாவிற்கு மேலதிகமாக மேலும் 2,500 ரூபாவினை  மாதாந்த மேலதிக  கொடுப்பனவாக வழங்குவதற்கு  நான் முன்மொழிகின்றேன். 

மிகவும் அவசர உதவி தேவைப்படும் போஷாக்குக்  குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட ஏறக்குறைய 61,000  குடும்பங்கள் காணப்படுவதாக அறிக்கைகள்  தெரிவிக்கின்றன. 2022 ஆம் ஆண்டில்  எதிர்வரும் நான்கு  மாதங்களுக்கு அவ்வாறான குடும்பம் ஒன்றுக்கு மாதாந்தம்  10,000 ரூபாவினை  வழங்குவதற்கு  நான் நடவடிக்கை எடுப்பேன். 

 ​மேற்குறித்த நிகழ்ச்சித்திட்டங்கள் அனைத்தையும்  நான்கு  மாதங்களுக்குள்  செயற்படுத்துவதற்கு  ரூபா 46,600 மில்லியனை நான் ஒதுக்கீடு  செய்கின்றேன்.

அண்மைக் காலமாக  மண்ணெண்ணெய்   விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு  கடற்றொழிலில்   ஈடுபட்டுள்ள  சிறு  மீன்பிடி படகுகளுக்கும்  மின்சார  வசதியற்ற  பெருந் தோட்ட  பிரதேசங்களில்  வாழுகின்ற  மக்களுக்கும்  பெரும்  சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது. 

சமகால  பொருளாதார நெருக்கடியினை குறைப்பதற்கும்  சமூக ஸ்திரத் தன்மையினை மீள நிர்மாணிக்கும் நிகழ்ச்சித்திட்டங்களை செயற்படுத்த உலக வங்கியின் கடன் திட்டத்தின் கீழ்  ரூபா  133 பில்லியன் ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது.  

இதற்கமைவாக,  தற்பொழுது நிலவுகின்ற  பொருளாதார நெருக்கடி  காரணமாக  பாதிக்கப்பட்ட  ஏறக்குறைய 3.2 மில்லியன்  மக்களுக்கு உடனடி  நிவாரணம் வழங்குவதற்கு  இந்த வரவு செலவுத்திட்டத்தினைச் சமர்ப்பிப்பதற்கு முன்னர்  பாராளுமன்றத்தில்  சமர்ப்பிக்கப்பட்ட  குறைநிரப்புநிரப்பு  மதிப்பீட்டினூடாக அங்கீகாரத்தினைப்  பெற்றுக் கொண்டேன்.

இதன்கீழ்  தற்பொழுது  சமுர்த்தி உதவி பெறுகின்ற  ஏறக்குறைய 1.7 மில்லியன்   குடும்பங்களுக்கு,  அவர்கள் பெறுகின்ற மாதாந்த சமுர்த்தி உதவு  தொகையினை 5,000  ரூபாவிலிருந்து   7,500 ரூபா வரைக்குமான தொகையொன்றாக அதிகரித்து வழங்கப்படும். இதற்கு மேலதிகமாக  சமுர்த்தி கொடுப்பனவுகளை எதிர்பார்த்து  காத்திருப்பு  பட்டியலிலுள்ள  ஏறக்குறைய  726,000 குடும்பங்களுக்கு தற்காலிகமாக ரூ. 5,000 உதவித் தொகை வழங்க ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

அத்துடன்,   முதியோர்,  அங்கவீனமுற்றோர்  மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கு செலுத்தப்பட்ட கொடுப்பனவு  5,000 ரூபாவிலிருந்து  7,500 ரூபா வரைக்குமான தொகையொன்றாக அதிகரிக்கப்பட்டது.  மேலும்,  இந்த உதவியினை  எதிர்பார்த்து  காத்திருப்புப் பட்டியலில்  இருந்தவர்களுக்கான தற்காலிக ஏற்பாடாக 5,000 ரூபா உதவி வழங்கப்பட்டது. 

இக்கருத்திட்டத்தின் கீழ்  வழங்கப்பட்ட மேற்படி  சலுகைகளுக்கு மேலதிகமாக, 2022/2023 பெரும் போகத்தில் நெற்செய்கைக்கு    தேவையான  யூரியாவினை இறக்குமதி செய்வதற்கு 110 மில்லியன் அமெரிக்க டொலர் (ரூபா 40 பில்லியன்) ஒதுக்கீடு  செய்யப்பட்டது.  தற்பொழுது  இதற்கான கொள்வனவுச்  செயற்பாடுகள்  இடம்பெற்று  வருகின்றன.  இதன் மூலம் எதிர்வருகின்ற  பெரும்போகத்தில் நெற்செய்கையாளர்களுக்கு   சிறந்த  அறவடையினைப் பெற்றுக்  கொள்ள முடியுமென்பதுடன்,  அதன் மூலம்  அரிசி நுகர்வாளர்களுக்கு சாதாரண விலையில்   அரிசியினைப்  பெற்றுக் கொள்ள முடியுமாக இருக்குமென நான் நம்புகின்றேன். 

அதேபோன்று  இக்கடன் திட்டத்தின் மூலம், வெளிநாட்டுச்  செலாவணி பற்றாக்குறையினால்  நாட்டில்  சமயல்  எரிவாயு  தட்டுப்பாடு  ஏற்பட்டதனால்  அவற்றினை நிவர்த்தி செய்வதற்கு சமயல் வாயுவினை இறக்குமதி  செய்து  குறுகிய  காலத்தில்  நாடு முழுவதும் விநியோகம்  செய்யப்பட்டது.  அத்துடன், எதிர்காலத்திலும்  பற்றாக்குறை ஏற்படாதவாறு  தேவையான சமயல் எரிவாயுவினைப் பெற்றுக் கொள்வதற்கு  நாம் செயற்பட வேண்டியுள்ளது.  அதற்காக இக்கடன் உதவியிலிருந்து  ஏறக்குறைய 70 மில்லியன் டொலர்களை (ரூபா 25 பில்லியன்)  செலவிடுவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. 

இவை  அனைத்தும் மேலே குறிப்பிடப்பட்ட சலுகைகளுக்கு  மேலதிகமானதாகும்.

புதிய சட்டங்கள்/சட்ட திருத்தங்களை  அறிமுகம்   செய்தல்

பொருளாதாரத்தினை உறுதிப்படுத்தல் மற்றும் பொருளாதார வளர்ச்சி  ஏற்பாடுகளுக்கு வசதியளிக்கும்  வகையில்  குறுகிய காலத்தில் மறுசீரமைப்புகளை துரிதப்படுத்தப் பொருத்தமான திருத்தங்கள் மற்றும் புதிய சட்டங்களை கீழ்வருமாறு  அறிமுகப்படுத்துவதற்கு நான் முன்மொழிகின்றேன். 

(அ) புதிய சட்டங்கள் 

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular