கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வட்டவளை பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள ஹைட்ரி மக்கள் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தொடர் குடியிருப்பில் அமைந்திருந்த 22 வீடுகளினுள் வெள்ளம் புகுந்துள்ளது.
மகாவலி கங்கைக்கு நீரை விநியோகிக்கும் ஹைட்ரி ஆற்றின் பெருக்கெடுப்பு காரணமாகவே இந்த வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.


கட்ந்த மாதம் 03.07.2022 அன்று ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட 22 வீடுகளுமே மீளவும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த 22 வீடுகளில் குடியிருந்த 25 குடும்பங்களை சேர்ந்த 80 பேர் தற்காலிகமாக நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர்.

இவர்களுக்கான சமைத்த உணவுகள் பஸ்பாகே பிரதேசம் செயலகம் மற்றும் நலன்விரும்பிகளால் வழங்கப்படுவதாக அப்பகுதிக்கான கிராம உத்தயோகத்தர் தெரிவித்தார்.

வெள்ள நீர் புகுந்த வீடுகளில் அதிகளவான சேற்று மண் நிறைந்து காணப்படுவதுடன் அவற்றை அகற்றுவதற்கு முடியாது தொடர்ந்தும் மழை பெய்து வருகின்றது.
இந்த சேற்று மண் காரணமாக அப்பிரதேசத்தில் துர் மனமும் வீசுகின்றது.
இந்த வீடுகளில் காணப்பட்ட பொருட்கள், ஆவணங்கள் என அனைத்தும் நீரில் அடித்து சென்றுள்ளன.
இந்த வீடுகளில் தமக்கு தொடர்ந்து வாழ முடியாது எனவே தமக்கு பொருத்தமான இடத்தில் வீடுகளை அமைந்து தம்மை நிம்மதியாக வாழ வழி செய்து தருவதற்கு சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.