நாடாளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபயவர்த்தன தலைமையில் கூடுகின்றது.
காலை 10 மணிக்கு கூடும் இன்றைய பாராளுமன்ற அமர்வு, 4.30 வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் எம்பியாக, வஜிர அபயவர்தன இன்றைய தினம் சத்திய பிரமாணம் செய்து கொள்வார்.
இதனை தொடர்ந்து, அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலம் நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதம் இடம்பெறும்.
பதில் ஜனாதிபதியாக கடமையாற்றிய ரணில் விக்கிரமசிங்க,கடந்த 17ஆம் தேதி, விஷேட வர்த்தமானி அறிவிப்பு ஒன்றை விடுத்து அவசரகால நிலையை பிரகடனம் செய்தார்.
அரசியலமைப்பின்படி, இந்த அவசர கால நிலை பிரகடனத்துக்கு 14 நாட்களுக்குள் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தை பெற வேண்டும்.
இந்த அங்கீகாரத்தை பெறுவதற்காகவே இன்றைய விவாதம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விவாதத்தின் முடிவில் பிற்பகல் நான்கு முப்பது மணி அளவில், வாக்கெடுப்பு நடத்தப்படும்.
இன்று நடத்தப்படும் இந்த வாக்கெடுப்பில், சில அரசியல் சுயரூபங்களை அறிந்து கொள்ள முடியும் என அரசியல் அவதானிகள் கூறுகின்றார்கள்.
புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நடத்தப்பட்ட தேர்தலில் ரகசிய வாக்கெடுப்பே நடத்தப்பட்டது. ஆனால், இன்று நடைபெற இருக்கின்ற அவசர கால நிலை மீதான வாக்கெடுப்பில், அரசு சார்பு நிலையை யார் எடுக்கிறார்கள் என்பது வெளிப்படையாக தெரிந்துவிடும். இந்த வேளையில், ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்தவர்கள் யார் என்பதும் வெளிப்படையாகிவிடும்.
ஆகவே, இன்றையபாராளுமன்ற அமர்வு, மிகவும் அரசியல் சுவாரசியம் நிறைந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதே வேளை, எதிரணியிலிருந்து ஆளும் கட்சிக்கு கட்சி தாவல் இடம் பெறலாம் என நம்பப்படுகின்றது. இதேபோல,எதிரணியில் இருந்து ஆளும் தரப்புக்கும் சிலர் தாவலாம்.
இப்படியான கட்சித் தாவல்கள் நாளை இடம் பெறுமாக இருந்தால், சர்வ கட்சி அரசாங்கத்தை உருவாக்கும் முயற்சி தோல்வி அடையலாம் என்று எதிர்பார்க்க முடிகின்றது.