ஜனாதிபதி செயலகத்திலிருந்து காணாமல் போன கலைப் பொருட்கள் சில போலீசாரால் தேடப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் அங்கிருந்து திருடப்பட்டதாக நம்பப்படும் தங்க முலாம் பூசப்பட்ட உருளைகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
இவர்கள் மூவரும் ராஜகிரிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
பெறுமதியான இந்த உருளைகளை இவர்கள் விற்பதற்கு முயன்ற போதே போலீசாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.
ஜன்னல் திரைச்சீலைகளில் போடப்பட்டிருந்த இந்த முலாம் பூசப்பட்ட சிறிய குண்டுகளே இவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன.
போராட்டக்காரர்களால் ஜனாதிபதி செயலகம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பொழுது, பொதுமக்களின் பாவனைக்காக திறந்து விட்டிருந்தனர். இந்த வேளையிலேயே பெறுமதியான பல பொருட்கள் களவாடப்பட்டுள்ளன.
இந்தப் பொருட்களை தேடி கண்டுபிடிப்பதற்காக விசேட போலிஸ் குழு ஒன்று நியமிக்கப்பட்டு தேடுதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
கைது செய்யப்பட்ட மூவரும் இந்த விசேட போலீஸ் படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.