இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியை ராஜினாமா செய்ததனால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தல் இன்று பாராளுமன்றத்தில் நடந்தது.
இதில் ரணில் விக்கிரமசிங்க 134 வாக்குகளையும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட டலஸ் அழக பெரும 82 வாக்குகளையும் அனுரகுமார திசாநாயக்க 03 வாக்குகளையும் பெற்றனர்.
225 பேர் கொண்ட பாராளுமன்றத்தில் 223 பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே வாக்களிப்பில் கலந்து கொண்டனர். கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் சமூகமளிக்கவில்லை. அதை நேரம் நான்கு வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இந்த அடிப்படையில், மூன்று வேட்பாளர்களிலும் பெரும்பான்மை வாக்குகளை பெற்ற ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
52 மேலதிக வாக்குகளால் இவர் வெற்றியீட்டி இருக்கிறார் என்று பாராளுமன்ற செயலாளர் நாயகம் உத்தியோபூர்வமாக அறிவித்தார்.
அரசியலமைப்பின் விதிமுறைகளுக்கு அமைய இன்று காலை 10 மணி அளவில் வாக்களிப்பு ஆரம்பமானது. கிட்டத்தட்ட 12.38 க்கு தேர்தல் முடிவு உத்தியோப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க அனைவருக்கும் நன்றி தெரிவித்து உரையாற்றினர். டலஸ் அழக பெரும, அனுர குமார திசாநாயக்க ஆகியோரும் உரையாற்றினார்கள் .