பொல்துவ சந்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, 3 பொலிஸாரை தாக்கி, 50 கண்ணீர்ப் புகை குண்டுகளை அபரிகத்துச் சென்ற சந்தேகநபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூலை 13ஆம் திகதி இரவு வேளையில், பாராளுமன்றத்திற்கு அருகில் பொல்துவ சந்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் பொலிஸார் மற்றும் இராணுவம் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த பொழுது, குறித்த பகுதியில் கண்ணீர்ப்புகை குண்டுகளை வைத்திருந்த முச்சக்கரவண்டியை தாக்கி, அங்கிருந்த பொலிஸார் மூவரையும் தாக்குதல் விளைவித்து, அவர்களிடமிருந்த, கண்ணீர்ப்புகை குண்டுகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் எடுத்துச் சென்றிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து இது தொடர்பான விசாரணைகளை வெலிக்கடை பொலிஸார் முன்னெடுத்திருந்தனர்.
அதற்கமைய, நேற்றையதினம் (17) வெலிக்கடை பொலிஸ் நிலைய அதிகாரிகளால், ஒபேசேகரபுர, நாணயக்கார மாவத்தையில் வைத்து சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் பொரளை, கோதமி வீதி பகுதியில் குறித்த நபர் தற்காலிகமாக வசித்து வந்த வீட்டிலிருந்து, அபகரித்துச் சென்ற 50 கண்ணீர்ப் புகை குண்டுகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைதான சந்தேகநபர் 31 வயதான, பொலன்னறுவை, காஷ்யப்பபுர பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை இன்றையதினம் (18) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, வெலிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.