எதிர்வரும் 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெறும் ஜனாதிபதித் தேர்தலில் பதில் ஜனாதிபதியை ஆதரிப்பது என்ற மொட்டு கட்சி பொதுச்செயலாளரின் அறிவிப்பு , கட்சிக்குள் பூகம்பத்தை ஏற்படுத்திருப்பதாக அறியக்கூடியதாக உள்ளது.
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்தக் கருத்துடன் முரண்படுவதுடன், டளஸ் அழகப்பெருமவுக்குத்தான் மொட்டு வாக்களிக்கும் என்பது அவரது நிலைப்பாடு என்பதையும் அறிவித்துள்ளார்.
தவிசாளருக்கு தெரியாமல் கட்சி ஒரு முடிவை எடுத்திருப்பது வெறும் அபத்தமான செயல் என்றும் ஜீ. எல். பீரிஸ் குற்றம் சாட்டுகிறார். அவருடன் மொட்டு அணியைச் சேர்ந்த சிலர் மேலும் இணைவதாவும் தெரிய வந்துள்ளது.
கட்சி பிளவுபட்டுள்ள நிலையில் வாக்கெடுப்பும் ரகசியமாக நடைபெறுவதால் – அதன் பின்னர் தமது தொகுதிகளுக்குச் செல்வது எவ்வாறு என பெரும்பாலான எம்.பி.க்கள் அச்சம் வெளியிட்டிருக்கின்றார்கள்.
இப்போதும் பெரும்பாலான எம்.பி.க்கள் தமது தொகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்த் துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த அச்சம் காரணமாக ரகசிய வாக்கெடுப்பில் பங்கேற்காமல் விடுவது என்ற நிலைப்பாட்டை மொட்டு எம்.பி.கள் சிலர் எடுக்கலாம் என சிங்கள இணையத்தளம் ஒன்று மொட்டு உறுப்பினர்களை ஆதாரம் காட்டி செய்தி வெளியிட்டிருக்கிறது.
உண்மையில்,சாகர காரியவசம் என்பவர், பசில் ராஜபக்ஷவின் அடிவருடி. பசில் எதைச் சொல்கிறாரோ அதை அப்படியே செய்யக் கூடியவர் சாகர கட்சி கூடி முடிவெடுக்காத நிலையில், கட்சியின் செயலாளரான சாகர, ரணிலை ஆதரிக்கப் போகிறோம் என்று அறிக்கை விடுவது என்பது, நிச்சயமாக அவருடைய சொந்த அறிக்கையாக இருக்காது. பசில் சொல்லி இதனை சாகர வெளியிட்டு இருப்பார் என்பதுதான் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
ரணில் என்பவர் நிராகரிக்கப்பட்ட ஒரு தலைவர். அவருக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு போராட்டங்கள் நடந்து வருகின்ற நிலையில், ரணில் விக்கிரமசிங்கவை தேர்தலில் ஆதரிக்கப் போகின்றோம் என்று மொட்டு கட்சி அறிவிக்கிறது என்றால், அரசியல் கபடத்தன தினம் சூழ்ச்சியினதும் வெளிப்பாடு என்று தோன்றுகிறது.
பசில் ராஜபக்ஷவின் தந்திரோபாயத்துடன் ரணில் விக்கிரம சிங்கவை தோற்கடிப்பதற்கான ஒரு சதி முயற்சியாகக்கூட இருக்கலாம் என்றும் பேசப்படுகிறது.
மஹிந்த ராஜபக்ஷ , கோட்டா பய ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ ஆகியோர் நாட்டை விட்டு தப்பிச் செல்லும் முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள். மொட்டுக் கட்சியின் முக்கிய தலைவர்களான இவர்கள் மூவரும் தலைமறைவாக வாழ்கிறார்கள் என்பதும் எதார்த்தமான உண்மை.
இந்த நிலையில், ரணில் விக்கிரமசிங்க வை ஆதரிக்க வேண்டும் என்று பகிரங்கமாக அறிவிப்பதன் பின்னணி என்ன?…
மொட்டுக் கட்சியின் ஆதரவுடன் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்பார் ஆக இருந்தால், பதவியில் நீடித்து நிலைப்பாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.
காலி முகத்திடல் போராட்டக்காரர்கள், தங்களுடைய பெயர் பலகையை மாற்றி இருக்கிறார்கள். ‘Gota go gama’ என்ற வாசகத்துக்கு பதிலாக ‘ ‘Ranil go gama’ என பெயர் மாற்றி இருக்கிறார்கள்.
ஆகவே மக்களால் நிராகரிக்கப்பட்ட மொட்டு கட்சியின் ஆதரவுடன் தெரிவு செய்யப்படும் எந்த ஒரு ஜனாதிபதியும் நீடித்து நிலைப்பார் என்பது கேள்விக்குறிதான்.
ஆகவே, இந்த விடயத்தில் மொட்டு கட்சி பிளவு பட்டிருந்தாலும், அல்லது பிளவு படுவது போல் காட்டிக்கொண்டாலும், மொட்டுக்கட்சி செயலாளரின் அறிவிப்பு நாட்டில் மேலும் வன்முறைகளை தூண்டுவதற்கு தூபமிடு வதாகவே தெரிகிறது.