நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை வைத்துக்கொண்டு ஜனாதிபதி,பிரதமரை தெரிவு செய்தால் நாடு ஒருபோதுமே ஸ்திர நிலையை அடைய முடியாது. ஏனெனில் கோத்தா ,ரணில் வீட்டுக்கு போக வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராஜமாணிக்கம் தெரிவித்தார்.
நாட்டை மீண்டும் ஸ்திர நிலைக்கு கொண்டு வரவேண்டுமானால் போராட்டக்காரர்களும் விரும்பக்கூடிய ஜனாதிபதி ,பிரதமரைக் கொண்ட தேசிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும். இதுதான்
யதார்த்தமான அரசியலாக நான் கருதுகிறேன்.
இதனை விடுத்து பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக ஒருவரை எழுந்த மானமாக தெரிவு செய்வது என்பது நாட்டில் மீண்டும் குழப்ப நிலையே ஏற்படுத்தும் என்றும் சாணக்கிய நம்பி கூறினார்.
ஜனாதிபதி வேட்பாளர்களை ஆதரிக்கும் விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 19ஆம் தேதி இறுதி முடிவு எடுக்கும். நடுநிலைவகிப்பதற்கான எந்த ஒரு தீர்வையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களில் எவரையாவது ஆதரிப்பதா அல்லது நடு நிலை வகிப்பதா என்பது தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு இன்னும் ஒரு தீர்மானத்திற்கு வரவில்லை.
தமிழ் தேசியக்கூட்டமைப்பு எம்.பி. க்கள் 19 ஆம் திகதி சந்திக்கவுள்ளதால் அன்றைய தினமே இறுதி முடிவெடுக்கப்படும் என்றார்.
ஜனாதிபதி வேட்பாளர்களை ஆதரிக்கும் விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் நடு நிலை வகிக்கும் என தமிழ் மக்கள் கூட்டணி செயலாளரும் எம்.பியுமான விக்னேஸ்வரன் கூறியுள்ளாரே என கேட்டதற்கு ஜனாதிபதி வேட்பாளர்களை ஆதரிக்கும் விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நடு நிலை வகிக்கும் எனக் கூறுவதற்கு விக்கினேஸ்வரன் எம்.பி. தமிழ் தேசியக்கூட்டமைப்பை சேர்ந்தவரல்ல என்றும் சாணக்கியன் கூறினார்.