கொழும்பு: இலங்கையின் புதிய அதிபர் பதவிக்கு இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்க உட்பட 4 பேர் போட்டியிடுகின்றனர். இதனிடையே இந்தியாவுக்கு வருவதற்கு முன்னாள் அதிபர் கோட்டா பய ராஜபக்ஷ விடுத்த கோரிக்கையை ஏற்க இந்தியா மறுத்துவிட்டது.
இலங்கையில் நிலவும் பொருளாதர நெருக்கடி காரணமாக அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்த நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்ச தனது மனைவியுடன் நாட்டைவிட்டு தப்பி சென்று விட்டார். அவரின் சகோதரர்களான முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவும், முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவும் வெளிநாடு செல்வதற்கு இலங்கை உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இதனிடையே நேற்று முன்தினம் கோத்தபய ராஜபக்சவுக்குப் பதிலாக நாட்டின் இடைக்கால அதிபராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார்.
இந்நிலையில் நேற்று இலங்கை நாடாளுமன்றம் கூடியது. மாலத்தீவில் இருந்து சிங்கப்பூருக்கு தப்பி ஓடிய அதிபர் கோத்தபய ராஜபக்ச அங்கிருந்தவாறு இ-மெயில் மூலமாக தமது ராஜினாமா கடிதத்தை சபாநாய கருக்கு அனுப்பியிருந்தார். இதனடிப்படையில் கோத்தபய ராஜபக்ச அனுப்பிய கடிதம் உண்மைதான் என்றும் அந்த ராஜினாமா கடிதத்தை தாம் ஏற்பதாக சபாநாயகர் மகிந்த யாப்பா நாடாளுமன்றத்தில் நேற்று அறிவித்தார்.
அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜினாமா செய்துவிட்டதால் புதிய அதிபர் அடுத்த 7 நாட்களுக்குள் நியமனம் செய்யப்படுவார் எனவும் சபாநாயகர் மகிந்த யாப்பா தெரிவித்தார்.
முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச, தனது ராஜினாமா கடிதத்தில் கூறும்போது, ‘‘எனது திறமைக்கு உள்பட்டு, என்னால் இயன்றவரை என் தாய்நாட்டுக்கு சிறப்பான சேவையே செய்தேன். கரோனா தொற்று பரவலும், அதனால் மேற்கொள்ளப்பட்ட பொதுமுடக்கமும்தான் இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணம்’’ என்று தெரிவித்துள்ளார்.