Monday, 5 December, 2022
yaraglobal
Homeகட்டுரைகொதிநிலையில் ஜனாதிபதி தேர்தல்: 4 வேட்பாளர்களும் சூறாவளி பிரசாரம்

கொதிநிலையில் ஜனாதிபதி தேர்தல்: 4 வேட்பாளர்களும் சூறாவளி பிரசாரம்

- தமிழ் கூட்டமைப்பு இன்னும் தீர்மானம் இல்லை - ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி முரண்டு பிடிக்கிறது. தனிநபருக்கு வாக்களிப்பது இல்லை எனத் தீர்மானம் - ரணிலை ஆதரிக்கும் பகிரங்க அறிவிப்பால் SLPP க்குள் பிளவு

கோட்டா பய ராஜபக்சஷவின் பதவி விலகலை அடுத்து ஏற்பட்டுள்ள ஜனாதிபதியின் பதவி வெற்றிடத்திற்கு பலமுனை போட்டி ஏற்பட்டிருக்கிறது.

ஜனாதிபதி ஒருவர் திடீரென பதவி விலகினால், அரசியலமைப்பின்படி புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கு பாராளுமன்றத்திற்கு அதிகாரம் இருக்கிறது.
இதன்படி, புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக எதிர்வரும் 20 ஆம் தேதி பாராளுமன்றத்தில் தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.

இதற்கான வேட்பு மனுக்கள் 19ஆம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட இருக்கிறது.
பாராளுமன்ற செயலாளர் நேற்று உத்தியோகபூர்வமாக இந்த தேர்தல் அறிவிப்பை பாராளுமன்றத்திலே வெளியிட்ட பின்பு, வேட்பாளர்களை நிறுத்துவதற்கான பிரசாரங்கள் சூடு பிடித்திருக்கின்றன.

இதுவரை நான்கு பேர் களத்தில் குதிப்பதாக உத்தியோபூர்வமாக அறிவித்திருக்கின்றார்கள். பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் அமைச்சர் டலஸ் அழகபெரும, ஜேவிபி தலைவர் அனுரகுமார திசாநாயக்க ஆகிய நால்வருமே ஜனாதிபதி தேர்தலில் போட்டி போட போவதாக அறிவித்திருக்கின்றார்கள்.

எதிர்வரும் 19ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டதன் பின்பே போட்டிக்களம் இறுதி வடிவம் பெறும்.

என்றாலும், இந்த நான்கு பேரும் தங்கள் தரப்புக்கு ஆதரவை திரட்டுவதில் மும்முரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பல நிவாரண திட்டங்களை அறிவித்திருக்கிறார். இன்னும் பல எதிர்கால சலுகை திட்டங்களையும் நாட்டுக்கு அறிவித்திருக்கிறார். இவை இவருடைய மறைமுகமான தேர்தல் பிரச்சார பணியாக தெரிகிறது.

அதேபோல,எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தனித்தனியாக சில கட்சிகளோடு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப் பெரும, 39 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட சுயாதீன குழுவின் சார்பில் நிறுத்தப்பட்டு இருக்கிறார். என்றாலும், இவரும் ஆளும் கட்சியில் இருந்து சில பேரின் ஆதரவை எதிர்பார்க்கிறார்.

அனுரகுமார திசாநாயக்க நேற்று இறுதி நேரத்தில் தான் போட்டி போட போவதாக அறிவித்திருந்தார். இவரும் பலபேரின் / பல கட்சிகளின் ஒத்துழைப்பை நாடி இருக்கிறார்.

இதேவேளை, ஆளும் கட்சியாக இருந்த பொதுசன பெரமுன, பாராளுமன்றத்தில் கூடுதலான ஆசனங்களை வைத்திருக்கிறது. இந்தக் கட்சி ரணில் விக்கிரமசிங்க வை ஆதரிக்கப் போவதாக பகிரங்கமாக அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு, பொதுசன பெரமுன கட்சியை இரண்டாக பிளவுபடுத்தும் நிலைக்கு தள்ளி இருக்கிறது.
ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்ற நிலையில், பொதுசன பெரமுனவின் அறிவிப்பு, ரணிலுக்கு பெரும் சங்கட நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், யாரை ஆதரிப்பது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்னும் தீர்மானிக்கவில்லை. வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் தினமான எதிர்வரும் 19ஆம் தேதியே தாங்கள் முடிவெடுக்க போவதாக தமிழ் கூட்டமைப்பு அறிவித்திருக்கிறது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய சஜித் பிரேமதாசவின் கூட்டணியில் இருந்தாலும், ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் யாரை ஆதரிப்பார்கள் என்று கூற முடியாது உள்ளது.

இதற்கிடையில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அறிவிப்பு அரசியல் அரங்கில் சற்று குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தனிநபர் எவருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வாக்களிக்கப் போவதில்லை என்றும்,ஜனாதிபதியாக ஏக மனதாக ஒருவர் தெரிவு செய்யப்பட்டு அனுப்பப்பட வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறது. அவ்வாறான ஒரு நிலை ஏற்படாவிட்டால் தாங்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கின்றார்.

இந்த நிலையில்,இறுதி நேரங்களில் சில அரசியல் மாற்றங்கள் ஏற்படலாம் என்று அரசியல் அவதானிகள் எதிர்வு கூறுகின்றார்கள். எதிர்வரும் 19ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டதன் பின்பு, புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதில் ஒரு நேர்கொண்ட பார்வையை நோக்க முடியும்.
Kuna -Ceylonsri

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments