சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை, அது தொடர்பான வழக்கு, பின்புலத்தை மையமாகக் கொண்டு அழுத்தமான திரைக்கதையால் தாக்கம் தரும் படைப்பு தான் ‘கார்கி’.
பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார் கார்கி (சாய்பல்லவி). அவரது அப்பா பிரம்மானந்தா (ஆர்.எஸ்.சிவாஜி), அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.

அந்த அடுக்குமாடி குடியிருப்பில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட, அதில் பிரம்மானந்தாவின் பெயரும் சேர்க்கப்படுகிறது.
தனது தந்தை குற்றவாளியில்லை என கூறி சட்டப் போராட்டத்தில் இறங்கும் மகள் கார்கி இறுதியில் வென்றாளா? உண்மையான குற்றவாளி யார் என்பதை சமரசமின்றி வலுவான திரைக்கையுடன் சொல்லும் படைப்புதான் ‘கார்கி’.
சந்தேகமேயில்லாமல் சமகால சினிமாவின் மிகச் சிறந்த நடிகருக்கான இடத்தை ஆக்கிரமித்திருக்கிறார் சாய் பல்லவி. மென்சோகத்தை சுமந்தபடி, திக்குத்தெரியாத காட்டில் சிக்கித்தவிக்கும் மானைப்போல, தந்தையை மீட்க திசையறிமால் ஓடுகிறார்.
அவரைவிட அந்தக் கதாபாத்திரத்தை யாரும் சிறப்பாக செய்துவிட முடியாது என சவால் விடும் அளவிற்கு நடிப்பின் மூலம் நியாயம் சேர்த்திருக்கிறார்.