** நாளையே உத்தியோகபூர்வ அறிவிப்பு **தஞ்சம் கோரி வரவில்லையென சிங்கப்பூர் அறிவிப்பு
அந்த வகையில் ஜனாதிபதியின் இராஜினாமா தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளை வெளியிடப்படவுள்ளதாக, சபாநாயகர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலைதீவிலிருந்து தற்போது சிங்கப்பூர் சென்றடைந்துள்ளதாக அந்நாடு உறுதிப்படுத்தியுள்ளது.சவூதி விமான சேவைக்குச் சொந்தமான SV 788 எனும் விமானம் மூலம் அவர் இன்று பிற்பகல் சிங்கப்பூரை சென்றடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனிப்பட்ட பயணமாக சிங்கப்பூருக்கு வந்துள்ளதாகவும், அவர் தஞ்சக் கோரிக்கை முன்வைத்து தமது நாட்டுக்கு வரவில்லையெனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது மாத்திரமன்றி பொதுவாக புகலிடக் கோரிக்கைகளை சிங்கப்பூர் அங்கீகரிப்பதில்லையெனவும் குறித்த அறிவிப்பில் சிங்கப்பூர் வெளி விவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (14) மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் நோக்கி பயணத்த SV 788 எனும் சவூதி அரேபிய விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தின் பயணம் தொடர்பில் www.flightradar24.com இணையத்தளத்தில் பல்லாயிரக் கணக்கானோர் தேடியுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது. Bloomberg செய்தி நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த ஒன்பதாம் திகதி, கொழும்பில் (நாடு முழுவதும் இருந்து) திரண்ட மக்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகக் கோரி, தன் எழுச்சி போராட்டங்களை நடத்தினர்.
இந்த நிலையில், ஜனாதிபதியின் உத்தியோபூர்வ வாச ஸ்தலமான ஜனாதிபதி மாளிகை, கொழும்பு காலி முகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகம், பிரதமரின் உத்தியோபூர்வ வாசஸ் தலமான அலரி மாளிகை ஆகின போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன.
அதாவது, இந்த இடங்களை போராட்டக்காரர்கள் கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தார்கள்.
பிரதமர் ரனில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி கோட்டா பய ராஜபக்ஷவினால், பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதை கண்டித்து, காலி முகத்திடல் போராட்டக்காரர்கள், நேற்று கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். இதன் போது,கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலம் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்த நிலையில், கொழும்பில் ஏற்பட்ட பதட்டநிலையை தணிப்பதற்காக, பதில் ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்க, நாட்டில் அவசர கால நிலையை பிரகடனப்படுத்தியதோடு, ஊரடங்கு சட்டத்தையும் அமுல்படுத்தினார்.இந்த நிலை இப்போதும் தொடர்ந்து வண்ணமே இருக்கின்றது.
இதேவேளை, இலங்கையின் சட்டத்தரணிகள் சங்கம், மற்றும் மத குருமார்கள், பொதுநல அமைப்புக்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று, போராட்டக்காரர்கள் தாங்கள் கைப்பற்றிய அரச அலுவலகங்களில் இருந்து உத்தியோகபூர்வமாக வெளியேறி இருக்கிறார்கள்.
அவர்கள் வெளியேறும்போது தெரிவித்த சில கோஷங்கள், நிலைமையை கொஞ்சம் சிந்திக்க வைக்கிறது.” மக்களின் போராட்டம் வெற்றி பெற்று இருக்கிறது… மக்களின் பலம் மேலோங்கட்டும்… மக்களின் தன் எழுச்சி போராட்டம் மூலம் ஜனாதிபதியை நாடு கடத்தி இருக்கின்றோம்.
அவர் தஞ்சமடைய இடமில்லாமல் ஓடித் திரிகிறார்… இது மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றி ” என தெரிவித்தனர்.
“எங்களுடைய போராட்டம் ரணில் விக்கிரமசிங்கவை நோக்கி நகர்கிறது. அவரும் உடனடியாக பதவி விலக வேண்டும். அதன் பின்பே எமது அமைதியான மக்கள் எழுச்சி போராட்டத்தை நாம் முடித்துக் கொள்வோம் ” என தெரிவித்தனர்.