ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், அலரி மாளிகை, பிரதமர் அலுவலகம் ஆகியவற்றை அரசாங்கத்திடம் ஒப்படைக்க போவதாக போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளார்கள்.
கடந்த ஒன்பதாம் தேதி நடத்தப்பட்ட மக்கள் எழுச்சி போராட்டத்தின் போது,ஜனாதிபதி மாளிகை,ஜனாதிபதி செயலகம் உட்பட அரசின் முக்கிய நிர்வாக அலுவலகங்களை போராட்டக்காரர்கள் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்கள்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,பதில் ஜனாதிபதியாக பதவி ஏற்றுக் கொண்டதை அடுத்து, கொழும்பு மாநகரில் பாரிய மக்கள் எழுச்சி போராட்டம் ஒன்று நடத்தப்பட்ட பொழுது, கொழும்பு கொள்ளுப்பிட்டி பிளாவர் வீதியில் உள்ள பிரதமரின் அலுவலகம் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
போராட்டக்காரர்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறிய இராணுவத்தினர்,பிரதமர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டையும் நேற்று இழந்தனர்.
இந்த நிலையில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்த்தன, கத்தோலிக்க பேராயர் கருதினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோரின் வேண்டுகோளுக்கு செவிமடுத்து இந்த அலுவலகங்களை மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைக்க முன் வந்திருக்கிறார்கள் என்பது, முக்கியமான அரசியல் திருப்பமாக பார்க்கப்படுகிறது.