இலங்கையில் பெரும் கலவரம் நடந்து வருகிறது. அரசியல் குழப்பம் ஏற்பட்டு மக்களை கட்டுப்படுத்த முடியாமல் ராணுவம் திணறுகிறது. பிரதமர் அலுவலகத்துக்குள் போராட்டக்காரர்கள் உள்ளே சென்று அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர்.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, மக்கள் கடந்த மார்ச்மாதம் முதல் தொடர் போராட்டங்களை நடத்திவந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அதிபர் கோத்தபய ராஜபக்சவின் அதிகாரபூர்வ மாளிகைக்குள் புகுந்து போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர்.
ஆனால், அதற்கு முன்பே இல்லத்தை விட்டு வெளியேறிய அதிபர் கோத்தபய, ராணுவத் தலைமையிடத்தில் பாதுகாப்பாக இருந்ததாகக் கூறப்பட்டது.
மக்களின் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, தனது பதவியை இன்று (ஜூலை 13) அதிபர் கோத்தபய ராஜிநாமா செய்யவுள்ளதாக நாடாளுமன்ற அவைத் தலைவர் மகிந்த யாபா அபேவர்தனா தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து கூட்டணி அரசை அமைப்பதற்கான நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் துரிதப்படுத்தியுள்ளன. நாட்டின் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 20-ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. கோத்தபய ராஜபக்ச இன்று பதவி விலகிய பிறகு, நாடாளுமன்றத் தலைவர் அபேவர்தனா இடைக்கால அதிபராக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.
இந்நிலையில் திரிகோணமலை கடல் அருகே உள்ள பகுதியில் இருந்து கடற்படைக்குச் சொந்தமான மிகப்பெரிய படகு மூலம் கோத்தபய ராஜபக்சவும், அவரது உறவினர்களும் திரிகோணமலை பகுதிக்கு வந்ததாகவும், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கொழும்பு சர்வதேச விமான நிலையத்துக்கு வந்ததாகவும் தகவல்கள் கசிந்தன.
அதிபர் கோத்தபய ராஜபக்ச இன்று அதிகாலை ராணுவ விமானம் மூலம் தனது மனைவியுடன் இலங்கையில் இருந்து புறப்பட்டு மாலத்தீவுக்குச் சென்றடைந்தார். அவருக்கு போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.
( நன்றி : இந்து தமிழ்)