தன் எழுச்சி மக்கள் போராட்டம் ஒன்று வெற்றி இலக்கை அடைந்து வரலாறு படைத்திருக்கிறது. இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவரை பதவி நீக்குவதற்கு மக்கள் சுமார் மூன்று மாதங்களுக்கு மேலாக நடத்திய போராட்டம் இன்று முடிவுக்கு வந்திருக்கிறது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகளில் மிகவும் பலம் பொருந்தியவராக இருந்தவர் கோட்டாபய ராஜபக்ஷ. 2019 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சஜித் பிரேமதாசவைவிடவும் 69 இலட்சம் வாக்குகளை பெற்று பலம் பொருந்திய மக்கள் ஆணையுள்ள ஜனாதிபதியாக பதவி பிரமாணம் செய்து கொண்டார்.
தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவும் நாட்டை பாதுகாக்கவும் அரசியலமைப்பு ரீதியான ஆணையும் அதிகாரமும் தனக்கு வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முன்வைத்து, அரசியலமைப்புக்கான 20 வது திருத்தத்தை நிறைவேற்றி கொண்டார்.
அதற்கு முன்னர் இருந்த நல்லாட்சி அரசாங்கம் ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பதற்கு ஏற்ற வகையில் அரசியலமைப்புக்கான 19வது திருத்தத்தை நிறைவேற்றியது. ராஜபக்ஷ பதவி ஏற்றுக்கொண்டதும், தனது அதிகாரங்கள் எந்த வகையிலும் குறைக்கப்படக்கூடாது என்பது தொடர்பில் அரசியலமைப்பில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என தீர்மானித்திருந்தார்.
மக்கள் ஆணையை நிறைவேற்றுவதற்கு இருக்கின்ற அதிகாரம் போதாது என்பதனாலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இருபதாவது திருத்தத்தின் மூலம் மேலும் அதிகாரங்களை தனது ஆக்கிக் கொண்டார். அதாவது,நிறைவேற்று அதிகாரத்தை மேலும் வலுப்படுத்தினார்.
தனது அதிகாரத்தை வலுப்படுத்தி மக்கள் சேவையை துணிவுடன் எடுத்துச் செல்வதற்கு ஏதுவாகவே, இருபதாவது திருத்தத்தின் ஊடாக பலத்தை பெற்றுக் கொண்டதாக ஜனாதிபதி கோட்டாபய கூறினார்.
ஆனால் இன்று இந்த நாடு மோசமான நிலைக்குச் சென்றதற்கு கோட்டாபயதான் காரணம். ஒரு ஆட்சியை எப்படி கொண்டு செல்வது என்று தெரியாததனால் ஏற்பட்டது ஒரு விளைவு. அதே நேரம், நிதி முகாமைத்துவத்தை சரியாக கையாள தெரியாமல் போனது இன்னொரு காரணம்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை சொர்க்கா புரியாக மாற்றுவார் என்பதே வாக்களித்த மக்களினதும் வாக்களிக்காத மக்களினதும் எதிர்பார்ப்பாக இருந்தது. நடந்ததெல்லாம் தலைகீழாகவே மாறியது.
எரிபொருள் இல்லை…சமையல் எரிவாயு இல்லை…பால்மா இல்லை.. இலங்கை ரூபாய் பெறுமதி கடுமையாக வீழ்ச்சி அடைந்தது…. ஏற்றுமதியை விட இறக்குமதி பொருளாதாரத்திலேயே இலங்கை தன்னை ஆர்வம் செலுத்திக் கொண்டிருந்தது. இது வருகின்ற எல்லா ஆட்சிகளிலும் தொடர்ந்து கொண்டிருக்கின்ற ஒரு சீரழிவு.
தேவையான அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு கூட போதிய டொலர் இல்லாததால் நாடு அதல பாதாளத்துக்குள் தள்ளப்பட்டது.
ஏ னைய பிரச்சினைகள் தான் ஓரளவு சமாளிக்க கூடியதாக இருந்தாலும், எரிபொருள் பிரச்சனை என்பது நாட்டின் அடிப்படை கட்டுமானத்திலேயே தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்தத் தாக்கத்தின் வெளிப்பாடு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரத்தையும் ஆட்டம் காண வைத்தது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின், தவறான முகாமைத்துவமும் வெளிப்படுத்தலும் தான் இதற்குக் காரணம் என்பதை சாதாரண மக்கள் கூட உணர்ந்து கொள்ளும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிட்டது.
ஜனாதிபதியை வெளியேற்றுகின்ற கோஷம் இதன் பின்பு தான் வலுப்பெறத் தொடங்கியது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட கோட்டா பய ராஜபக்ஷவை வெளியேற்றினால் நாட்டுக்கு நல்லது கிடைக்கும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.
கோட்டாபய ராஜபக்ஷ பதவியில் இருந்து இராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோஷம் நாடு முழுவதும் வலுப்பெற்றது. ‘ Gota – Go – home ‘ என்ற போராட்டம் பட்டி தொட்டி எல்லாம் நடத்தப்பட்டது. என்றாலும், அரசியல் காய் நகர்த்தல்களைச் செய்த கோட்டாபய ராஜபக்ஷ, மக்களின் நீண்ட நாள் போராட்டத்துக்கு எந்த மதிப்பையோ மரியாதையோ கொடுத்ததாகத் தெரியவில்லை. சாதாரண பிரஜைகளால் முன்னெடுக்கப்பட்ட மக்கள் தன்னெழுச்சி போராட்டங்களை போலீசாரையும் ராணுவத்தினரையும் பயன்படுத்தி அடக்குவதிலேயே அவர் கண்ணும் கருத்துமாக இருந்தார் .
என்றாலும், தன் எழுச்சியுடன் போராடிய மக்கள் இன்று தங்களது இலக்கை எட்டி இருக்கிறார்கள். பதவியை ராஜினாமா செய்து விட்டு வீட்டுக்குச் செல்லுமாறு போராடி வந்த மக்கள் இன்று ஒன்பதாம் தேதி( 09.07.2022 ) வரை அவருக்கு கால அவகாசம் வழங்கினர். என்றாலும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட செருக்குத் தனத்தில் தனது பதவியை தொடர்ந்த வண்ணமே இருந்தார்.
இன்று ஆத்திரமடைந்த நிலையில் நாட்டின் நாலாபுறங்களிலிருந்தும் திரண்டமக்கள் உணர்ச்சிப்படையாக கொழும்பு மாநகரை முற்றுகையிட்டனர். கோட்டாவுக்கு இறுதிச் சந்தர்ப்பம் என்று நேற்று இலங்கையிலே பல பாகங்களிலும் அறிவிக்கப்பட்டது. என்றாலும்,எதற்கும் செவிமடுக்காத அவர்வரும்போது ராஜபக்ச நேற்று இரவு அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இருந்து தப்பி ஓடி உள்ளார். அவர் எவ்வாறு தப்பி ஓடினார் ; எங்கு இருக்கிறார் என்பது இந்தக் கட்டுரை எழுதும் வரை ஊர்ஜிதமாகவில்லை.
தன்னெழுச்சி போராட்டத்தில் ஈடுபட்டு இலங்கையின் நாலாபுறங்களிலும் இருந்து கொழும்பில் திரண்ட மக்கள், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தனர். மக்கள் சக்திக்கு முன் எதுவும் நிற்க முடியாது என்பதை இன்று இலங்கை மக்கள் நிரூபித்து இருக்கிறார்கள்.
ஜனாதிபதியை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டு இருந்த பாதுகாப்பு அரன்களை எல்லாம் உடைத்தெறிந்து ஜனாதிபதி மாளிகையை இன்று நண்பகல் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். ஜனாதிபதி மாளிகைக்குள் கோட்டா பய ராஜபக்ஷ இல்லை என்பது மக்கள் உள்நுழைந்த போது தான் தெரிந்தது.
இதே போல,சற்று தொலைவில் உள்ள ஜனாதிபதி செயலகத்தை இன்று பிற்பகல் அளவில் கைப்பற்றினர்.
இதன் பின்னர் பிற்பகல் அளவில் பிரதமரின் உத்தியோபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகையும் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
கோட்டாபய இங்கிருந்து தப்பி ஓடினாலும், எங்களது போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும் என காலி முகத்திடல் போராட்ட குழு அறிவித்திருக்கிறது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவம் பிரதமர் ரனில் விக்ரமசிங்கம் தங்களது பதவிகளிலிருந்து ராஜினாமா செய்வதாக புத்தியபூர்வமாக அறிவித்திருக்கின்றார்கள்.
இதுக்கிடையில் சர்வ கட்சி அரசாங்கம் ஒன்று நிரந்தரமாக அமைக்கப்படும் வரை பதில் ஜனாதிபதியாக சபாநாயகர் மகிந்த யாபா அவை ஒத்தன செயல்படுவார் என்று கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
இன்று பிற்பகல் அவசர அவசரமாக கொழும்பில் சபாநாயகரின் உத்தியோக பூர்வ வாசஸ்தலத்தில் கூடிய, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் இந்த முடிவை எட்டி இருக்கிறார்கள். இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானமும் எழுத்து மூலம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக சபாநாயகர் அறிவித்திருக்கிறார்.
ஜனாதிபதி கோட்டாபய தப்பி ஓடினாலும், நாட்டில் உடனடியாக ஸ்திரமான ஒரு அரசாங்கம் உருவாகும் என்று எதிர்பார்க்க முடியாது. இதே பதட்ட நிலை சில தினங்கள் நீடித்த பின்பு தான் ஓரளவு அரசியல் நிலைமைகளில் தணிவுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
Ceylonsri – குணா