Tuesday, 6 December, 2022
yaraglobal
Homeகட்டுரைசர்வகட்சி அரசாங்கம்; தமிழ் மக்களுக்கு என்ன பயன்?

சர்வகட்சி அரசாங்கம்; தமிழ் மக்களுக்கு என்ன பயன்?

இலங்கை அரசியலை ஆராய்கிறார் ஆய்வாளர் யோதிலிங்கம்

இலங்கைத் தீவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக சர்வகட்சி அரசாங்கம் ஒன்றினை அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

விக்டர் ஐவன் போன்ற சிங்களக் சிவில் சமூகப்பிரமுகர்களின் ஆலோசனையுடனும், பங்களிப்புடனும் இவை மேற்கொள்ளப்படுகின்றன.

கடந்த வாரம் இடம்பெற்ற முதலாவது கலந்துரையாடலில் ஐக்கிய மக்கள் சக்தி, சிறீலங்கா சுதந்திரக் கட்சி என்பவற்றுடன் தமிழ்மக்கள் கூட்டணியின் தலைவர் விக்கினேஸ்வரனும் பங்குபற்றியிருந்தார். இரண்டாவது கலந்துரையாடல் கடந்த 05ம் திகதி பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றுள்ளது.

இதில் ஐக்கிய மக்கள் சக்தி, சிறீலங்கா சுதந்திரக் கட்சி, சுயாதீனப் பாராளுமன்றக் குழு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பன பங்குபற்றியிருந்தன. இதில் பல்வேறு தரப்பினரது ஆலோசனைகளை ஒன்றிணைத்து ஆராய்வதற்காக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்லவை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை நியமிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இந்தக் கலந்துரையாடல்களில் தமிழ் மக்கள் சார்பில் பங்குபற்றிய விக்கினேஸ்வரனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் தொடர்பாக ஆலோசனைகளை முன்வைத்தார்களா? அவ்வாறாயின் எத்தகைய ஆலோசனைகளை முன்வைத்தார்கள் என்பது பற்றி எந்தத் தகவலும் இது வரை வெளிவரவில்லை.

இது பற்றி கட்சிகளுக்குள்ளேயோ கூட்டணிக்குள்ளேயோ எந்தவித கலந்துரையாடல்களும் இடம் பெற்றதாகத் தெரியவில்லை. தற்போதைய நெருக்கடி என்பது பெரும்தேசியவாதத்தின் லிபரல்பிரிவு, பெரும்தேசியவாதத்தின் இனவாதப்பிரிவு, ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் குறிப்பாக தமிழ் மக்கள் புவிசார் அரசியல்காரரான இந்தியா, பூகோள அரசியல் காரர்களான அமெரிக்கா, சீனா என்பவற்றின் நலன்களுக்கிடையிலான மோதல்களினால் ஏற்பட்டதாகும்.

நெருக்கடிக்கான தீர்வு என்பது சம்பந்தப்பட்ட ஐந்து தரப்பினரதும் நலன்கள் சந்திக்கின்ற புள்ளியாகும். எனவே இந்த நெருக்கடி மைதானத்தில் தமிழ் மக்களுக்கும் தவிர்க்கப்பட முடியாத கௌரவமான இடம் இருக்கின்றது.

தமிழ் மக்களைப் புறக்கணித்துவிட்டு இந்த நெருக்கடியைத் தீர்க்க முடியாது என்பதே யதார்த்தமான உண்மையாகும். தமிழ் அரசியல் கட்சிகள் இந்த உண்மையை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

எனவே நெருக்கடித் தீர்வு முயற்சியில் தமிழ் மக்களின் அபிலாசைகளை கௌரவமாக முன்வைப்பதற்கு தமிழ்க் கட்சிகள் தயங்கக் கூடாது.சர்வதேச நாணய நிதியம் கடும் நிபந்தனைகளை அரசாங்கத்தின் மீது விதித்துள்ளது.

அதில் ஒன்று இராணுவத்தின் ஆளணியைக் குறைக்க வேண்டும் என்பதாகும். இனப்பிரச்சினையைத் தீர்க்காமல் இராணுவத்தின் ஆளணியைக் குறைக்க முடியாது. தவிர நாட்டின் ஸ்திரமான நிலையையும் சர்வதேச நாணய நிதியம் கோரியுள்ளது.

அதற்கும் கூட இனப்பிச்சினைக்கான தீர்வு நிபந்தனையாக உள்ளது. அரசியல் தீர்வாக தற்போதுள்ள 13 வது திருத்தத்தை திணிக்கும் முயற்சி இடம் பெறலாம். தமிழ் மக்கள் அதனை நிராகரிக்க வேண்டும். 13 வது திருத்தம் அரசியல் தீர்விற்கான ஆரம்பப் புள்ளியாக கூட இருக்கப்போவதில்லை.

ஒற்றையாட்சிக்குட்பட்ட சுயாதீனமில்லாத பொறிமுறையைக் கொண்ட 13 வது திருத்தம் எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.

தென்னிலங்கையில் செயற்படும் எதிர்க்கட்சிகளின் அணி ஏதோ ஒரு வகையில் தமிழ்த் தரப்பையும் சர்வகட்சி அரசாங்கச் செயற்பாட்டில் பங்குபற்றச் செய்யவே முயற்சிக்கின்றது.

ஆனால் அவர்களின் பெரும்பான்மை வெற்றுக் காசோலையில் கையெழுத்துப் பெறவே விரும்புகின்றது. சிறிய பிரிவினர் தற்போதுள்ள 13வது திருத்தத்தை தமிழ் மக்களின் தலையில் கட்டிவிடுவதன் மூலம் நிலைமையை சமாளிக்க முயல்கின்றன்தமிழ் மக்களின் தேச அங்கீகாரம், இறைமை அங்கீகாரம், சுயநிர்ணய உரிமை அங்கீகாரம், சுயநிர்ணய சமஸ்டி என்பவற்றை பேசுவதற்கு அவர்கள் இன்னமும் தயாராகவில்லை.

சர்வதேச தரப்புகளும் வலுவான கோரிக்கைகளை வைக்காமல் சிங்கள தரப்போடு இணைந்து செயற்பட வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றது.

அண்மையில் சுவிஸ்லாந்து அரசின் பேரில் அழைக்கப்பட்ட தமிழ்ப் பிரதிநிதிகளிடமும் மறைமுகமாக இதற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஆனாலும் தமிழ்ப் பிரதிநிதிகள் அதற்கு இணங்கவில்லை. இன்று சிங்கள தரப்பும், சர்வதேச சக்திகளும் பெரும் பொறிக்குள் மாட்டுப்பட்டுள்ளனர்.

தமிழ் மக்களினதும் பங்களிப்பு இல்லாமல் இந்த நெருக்கடியை தீர்;க்க முடியாது என்பதே அந்தப் பொறிமுறை. இந்தச் சூழலை தமிழ்த் தரப்பு அவதானமாக கையாள வேண்டும். இந்தச் சந்தர்ப்பத்தை தவறவிட்டால் அண்மைய காலத்திற்கு சந்தர்ப்பங்கள் வருவதற்கான சாத்தியங்கள்; குறைவு. எனவே சர்வகட்சி அரசாங்கம் முயற்சிகளின் போது தமிழ்த் தரப்பு தங்கள் பக்க கோரிக்கையை அழுத்தமாக முன்வைக்க வேண்டும்.

இது தொடர்பாக மூன்று வகையான செயல்திட்டங்களுக்கு அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும்.

1. தமிழ்த் தரப்பின் பங்களிப்பைப் பெறுவதற்கு சிங்களத்தரப்பு நல்லெண்ணத்தைக் காட்ட வேண்டும். எனவே சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டு ஒரு மாதத்திற்குள் பின்வரும் விடயங்களுக்கு தீர்வு காணுதல் வேண்டும்.

I. அரசியல் தீர்மானம் ஒன்றின் மூலம் எந்தவித நிபந்தனையுமில்லாமல் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படல் வேண்டும்.

II. நிலைமாறு கால நீதிக் கோட்பாட்டிற்கமைய காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தீர்க்கப்படல் வேண்டும். இது விடயத்தில் உண்மையைக் கண்டறிதல், நீதி வழங்குதல், இழப்பீடு வழங்குதல் மீள நிகழாமையை உறுதிப்படுத்தல் போன்ற செயற்பாடுகளுக்கு கால அட்டவணை வகுத்தல் வேண்டும்.

இவர்களுக்கான இழப்பீடு தீர்மானிக்கப்படும் வரை தற்போதைய விலைவாசி உயர்வுக்கேற்ப மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படல் வேண்டும். முன்னைய 6000 ரூபா எந்த வகையிலும் போதுமானதல்ல.

III. இராணுவம் கைப்பற்றியுள்ள காணிகள் அனைத்தும் உடனடியாக விடுவிக்கப்படல் வேண்டும்.     

IV. 2009 க்கு பின்னர் உருவாக்கப்பட்ட அனைத்து சிங்களக் குடியேற்றங்களும் அகற்றப்படல் வேண்டும்.     

V. தொல்லியல் திணைக்களம், வனபரிபாலன தினைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி சபை, பௌத்த விவகாரங்கள் அமைச்சு என்பன தமிழர் தாயகத்தில் மேற்கொள்கின்ற ஆக்கிரமிப்புக்கள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.

2. அரசியல் தீர்வு தொடர்பாக சிங்கள தேசத்திற்கும் தமிழ்த்தேசத்திற்கும் இடையே சமூக ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படல் வேண்டும். அதில் தமிழ் தேச அங்கீகாரம், இறைமை அங்கீகாரம், சுயநிர்ணய அங்கீகாரம், சுயநிர்ணய சமஸ்டி என்பன ஏற்றுக்கொள்ளப்படல் வேண்டும். இதற்கான அரசியல் யாப்புச்சட்ட வடிவம் ஆறு மாதங்களுக்குள் உருவாக்கப்படல் வேண்டும்.

3. அரசியல் தீர்வு வரும் வரை இடைக்கால நிர்வாகம் தமிழ் மக்களுக்கு வழங்கப்படல் வேண்டும். அந்த நிர்வாகத்திற்கு காணி அதிகாரம் பொலிஸ் அதிகாரம் உட்பட தமிழ் மக்களின் விவகாரங்களை கவனிப்பதற்கான சுயமான அதிகாரங்கள் வழங்கப்படல் வேண்டும்.

எல்லாவற்றிலும் முக்கியம் இந்த மூன்று செயல் திட்டங்களுக்குமான ஒப்புதல் சர்வதேச நடுவர்கள் முன்னிலையில் வழங்கப்படல் வேண்டும்.இந்த செயல் திட்டங்களை எதிர்க்கட்சிகள் தரப்பு ஏற்காவிட்டால் சர்வகட்சி அரசாங்க முயற்சிகளுக்கு தமிழ்த் தரப்பு எந்த பங்களிப்புகளையும் வழங்கக் கூடாது.

அந்த முயற்சிகளில் இருந்து முழுமையாக வெளியேற வேண்டும். இதனை மீறி தமிழ் தேசியக் கட்சிகள் செயற்படுமாக இருந்தால் அவர்கள் முழுமையாக மக்கள் முன் அம்பலப்படுத்தப்படுவர்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments