இன்றைய நிலைமை:
** அமைதி வழியில் போராட்டம் நடத்துமாறு போலீஸ் மா அதிபர் வேண்டுகோள்
கொழும்பு மாநகரில் நாளை நடைபெற இருக்கும் முற்றுகைப் போராட்டத்தையிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இன்றும் நாளையும் கொழும்பில் பாரிய முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்கு தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சிகளும் தீர்மானித்திருக்கின்றன. இதனை அடுத்து, அதிரடிப்படையினரும் போலீசாரும் பெருமளவுக்கு விக்கப்பட்டு இருப்பதாக தெரிய வருகிறது.
நாடு முழுவதும் இருந்து சுமார் 8000 போலீசாரும் அதிரடிப்படையினரும் கொழும்புக்கு மேலதிக பணிக்கு அழைக்கப்பட்டிருக்கின்றார்கள்.
எந்தவிதமான அசம்பாவிதங்களும் இல்லாமல் அமைதிப் போராட்டங்களில் ஈடுபடுமாறு போலீஸ் மா அதிபர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொழும்பில் நடத்துவதற்கு திட்டமிட்டு இருக்கின்ற இந்த முற்றுகை போராட்டத்தை தடுப்பதற்கு போலீசார் நீதிமன்றத்தில் தடை மனு ஒன்றை கோரியபோதும், கொழும்பு மேஜிஸ்ட்ரேட் நிராகரித்து உள்ளது .
இந்த நிலையில் அறிக்கை ஒன்று விட்டுள்ள போலீஸ் மா அதிபர், “சொத்துக்களுக்கும் உடைமைகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்தாமல் ஜனநாயக உரிமை போராட்டங்களை முன்னெடுங்கள்” என கேட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவையும் பிரதமர் ரணில் தலைமையிலான இந்த அரசாங்கத்தையும் வீட்டுக்கு அனுப்பும் போராட்டத்தின் இறுதி கட்டமாகவே அரசியல் கட்சிகள் இதனை தெரிவித்துள்ளன. இதற்காக நாடு முழுவதிலும் இருந்து மக்களை கொழும்பில் அணி திரளுமாறும் வேண்டுகோள் விடுத்திருக்கின்றன.
கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக நடத்தப்படும் இந்த முற்றுகை போராட்டம் வன்முறை போராட்டமாக வெடிக்கக் கூடாது என்பதில், அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் தெளிவாகவே இருக்கின்றன. என்றாலும் வன்முறைகளை தூண்டும் சக்திகள் சில குழப்பங்களை விளைவிக்கலாம் என்ற எச்சரிக்கையும் அரசியல் கட்சிகள் விடுக்காமல் இல்லை.
கொழும்பு மாநகரை பொறுத்தவரையில், மக்கள் ஒரு பதட்டமான சூழ்நிலையில் இருப்பதையே பார்க்க முடிகின்றது. இன்றைய நிலைமையில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில் தான், கொழும்பு மாநகரில் ஆங்காங்கே ஒரு சில பொது போக்குவரத்துகளை காண முடிகின்றது.
ஆயுதம் தரித்த போலீசாரும் அதிரடிப்படையினரும் கேந்திர முக்கியத்துவமான இடங்களிலே பாதுகாப்பு கடமையில் இருக்கின்றார்கள். அச்சமான சூழ்நிலை கொழும்பு மாநகரில் தொடர்கின்றது.