ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தின் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கடுமையான முயற்சிகளை வரவேற்றுள்ள ஒலுவில் பிரதேச பலநாள் ஆழ்கடல் மீன்பிடிக் கலன்களின் உரிமையாளர்கள் ஒலுவில் துறைமுகத்தின் செயற்பாடுகளை விரைவுபடுத்துவதற்கான பூரண ஒத்துழைப்புக்களை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் இன்று(06.07.2022) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே மேற்குறிப்பிட்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஒலுவில் துறைமுகத்தினை பலநாள் ஆழ்கடல் கலன்கள் மற்றும் ஒருநாள் மீன்பிடிப் படகுகளை செயற்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய மணல் அகழ்வு மற்றும் ஐஸ் தொழிற்சாலை, மீன் பதனிடும் தொகுதி போன்றவற்றை சிறப்பாக செயற்படுத்துவதற்கும் தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கும் ஒலுவில் பிரதேசத்தினை சேர்ந்த பலநாள் ஆழ்கடல் மீன்பிடி கலன்களின் உரிமையாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இதனை வரவேற்றுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதேச கடற்றொழிலாளர்களின் பங்களிப்புடன், தேவையானளவு தனியார் முதலீடுகளையும் பயன்படுத்தி ஒலுவில் துறைமுகத்தினை வினைத்திறனாக மாற்றுவதே தன்னுடைய எதிர்பார்ப்பு என்று தெரிவித்ததுடன், இதனூடாக மறைந்த முஸ்லீம் மக்களின் தேசியத் தலைவர் மர்ஹீம் அஸ்ரப் அவர்களின் விருப்பமும் ஈடேற்றப்படும் எனவும் தெரிவித்தார்.

