(கனகராசா சரவணன்)
கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொத்துக்குளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நேற்று (04) திங்கட்கிழமை நண்பகல் 12 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
மாரசூரனை வதைத்து மாரியம்மன் எனப் பெயர் கொண்ட உலகமெல்லாம் இரட்சத்துவரும் அன்னை மாரியம்மன் அகல் விளக்கு எரியவைத்த காலத்துக்கு முந்திய காலமாக மட்டக்களப்பில் அருள்பாலித்துவருகின்றாள் அம்மாளின் மஹோற்சவம் திருவிழா
ஆலய பிரதம குரு.ஸ்ரீ நிஜோத் குருக்களின் வழிகாட்டலில் விநாயர் வழிபாடுகளுடன் ஆரம்பமாகி விசேட கும்ப பூஜைகள் நடைபெற்றதுடன் பிள்ளையாரடி புரவிப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து கொடிச்சீலை ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.
இதன்போது கொடிச்சீலைக்கு விசேட பூசைகள் நடைபெற்றதுடன் மூலமூர்த்தி மற்றும் பாரிபால மூர்த்திகளுக்கு விசேட அபிஷேக பூசைகளும் நடைபெற்று வசந்த மண்டபத்தில் எழுந்தருளியுள்ள அம்மனுக்கு விசேட பூஜைகள் நடத்தப்பட்டன.
அதனைத்தொடர்ந்து கொடிச்சீலை ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு கொடித்தம்பத்துக்கு அருகில் விசேட பூஜைகள் நடத்தப்பட்டதுடன் வேத,மேள வாத்தியங்கள், நாதங்கள் முழங்கள் அடியார்களின் அரோகரா கோசத்துடன் சரியாக நண்பகல் 12 மணிக்கு கொடியேற்றம் செய்யப்பட்டதுடன் கொடியேற்றத்தினை தொடர்ந்து தம்பத்துக்கு அபிஷேகமும் செய்யப்பட்டு விசேட பூசையும் இடம்பெற்றது. இதன்போது கொடியேற்ற பிரதம குருவினால் அனைவருக்கும் ஆசிர்வாதம் பிரம்ம ஸ்ரீ ஆதி செளந்தராஜ குருக்கள் வழங்கப்பட்டது.
10 தினங்கள் நடைபெறவுள்ள ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் 12 ஆம் திகதி செவ்வாய் கிழமை சித்திரத்தேர் பவனி இடம்பெறவுள்ளதுடன் புதன்கிழமை தீர்த்த உற்சவம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.



