**வீதியில் நிற்கும் மக்களுக்கு என்ன தீர்வு?
** சபாநாயகருடன் சஜித் பிரேமதாச வாய்த்தர்க்கம்
பிரதமர் சபையில் உரையாற்றி முடிந்ததும் அதற்கு பதிலளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் எழுந்த பொழுது மீண்டும் சபையில் அமளி ஏற்பட்டது.
பாராளுமன்ற நிலையியல் கட்டளையின்படி சபையை நடத்துவதற்கு அனுமதி வழங்குங்கள் என்று சபாநாயகர் சஜித் பிரேமதாசாவிடம் வேண்டுகோள் விடுத்தார். சபாநாயகரின் வேண்டுகோளையும் புறக்கணித்து சஜித் பிரேமதாச ஆவேசமாக பேசினார். “சபாநாயகர் அவர்களே எனது வாயை மூடுவதற்கு முயற்சிக்க வேண்டாம். நீங்கள் இடம் தராவிட்டால் வீதிகளுக்கு இறங்கி போராடுவோம் ” என்று பேசிய சஜித், தனது உரையை தொடர்ந்தார்.
பிரதமரின் இன்றைய உரையில் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு சொல்லப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், “நாடு வங்குரோத்து நிலையில் இருப்பதாக பிரதமர் தெரிவித்தார். அது நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு தெரிந்ததே, எரிபொருள் வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு தீர்வு வழங்கினாரா? இன்று திரிபோஷா இல்லை. கர்ப்பிணிப் பெண்களுக்கு போசாக்கு இல்லை, பிறக்கும் குழந்தைகளுக்கு போசாக்கு இல்லை. இதற்கு பிரதமர் தீர்வு வழங்கினாரா? என்று எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.
இதைவிட நல்ல திட்டங்கள் இருந்தால் சொல்லுமாறு பிரதமர் தனது உரையில் தெரிவித்தார். நான் சொல்கிறேன், முதலில் ஊழல் மோசடியை நிறுத்துங்கள். மக்களின் பணத்தை கொள்ளையடிப்பதை நிறுத்துங்கள். கட்டார் நாடு பயங்கரவாதிகளுக்கு துணை நிற்கிறது என்று அப்போது கூறினீர்கள். இப்போது அந்த நாடுகளுக்கு எரிபொருள் கோரி செல்கின்றீர்கள். இதுவொரு வெட்கக்கேடான விடயமாகும்.என்றார்.