சென்னை: தமிழக அரசை கண்டித்து பாஜக சார்பில் மாநிலம் முழுவதும் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் சட்டம் – ஒழுங்குமோசமாக இருக்கிறது. காவல் நிலையத்தில் தொடரும் லாக்கப்மரணங்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், கல்வித் துறையில் தொலைநோக்கு பார்வை இன்றி தொடர்ந்து நடக்கும் குழப்பமான நடவடிக்கைகள், தொழில் வணிகத்துறையில் தொடரும் எதிர்வினைகள், விவசாயிகளை கைவிட்டது உள்ளிட்ட ஆளும் திமுகவின் நடவடிக்கைகள் பெரும் துன்பத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறது.
கொடுத்த வாக்குறுதிகள் எதையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை. நிறைவேற்ற முடியாதவாக்குறுதிகளை அளித்துவிட்டு, வெறும் அறிக்கை அரசியலைமட்டும் நடத்துகின்றனர்.
பட்டியல் இனத்தின் பாதுகாவலர் என்று சொல்லிக்கொள்ளும் திமுக, பட்டியல் இனத்தை சேர்ந்த ஒரு பெண்ணை, நாட்டின் குடியரசுத் தலைவராக பாஜக முன்னிறுத்தும்போது வரவேற்று இருக்க வேண்டாமா? திமுகவுக்கு உண்மையான கொள்கைப் பிடிப்புகிடையாது. எந்த ஒரு செயலுக்கும் லாப நோக்கம் இல்லாமல், திமுகவால் செயல்பட முடியாது.
மக்கள் படும் துன்பத்தை மறந்துவிட்ட திமுக ஆட்சியைக் கண்டித்துதமிழகம் முழுவதும் ஜூலை5-ம் தேதி (இன்று) ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை பாஜக நடத்துகிறது. மக்கள் நலனுக்காக நடத்தப்படும் இந்தப் போராட்டத்தில் அனைவரும் பங்குபெற்று ஆதரவளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்