6 மாதங்களில் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கான முதற்கட்ட நடவடிக்கையை மேற்கொள்வதாகவே தான் தெரிவித்தாக ஜேவிபி தலைவர்
அநுரகுமார
திசாநாயக்க சபையில் தெரிவித்தார்.
நாடு இவ்வாறு வங்கரோத்து நிலையை அடைந்துள்ள நிலையில், தற்போதைய அரசாங்கம் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லையெனவும் அவர் குறிப்பிட்டார்.அனைத்துக் கட்சிகளுடனும் இணைந்துக்கொண்டு ஆட்சியமைக்க தயார் என்று கடந்த மே மாதம் தான் தெரிவித்ததாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க சுட்டி காட்டினார்.
தான் கூறும் பெரும்பாலான விடயங்களில் ஒரு பகுதியை மாத்திரம் எடுத்துக்கொண்டு தன்னையும், தனது கட்சியையும் அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிடுவதாகவும் அனுர குமார எம்.பி. குறிப்பிட்டார். முக்கியமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த விடயத்தில் கைதேர்ந்தவர் எனவும் அனுர குமார திசாநாயக்க குறிப்பிட்டார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அனுரகுமார எம்.பி,
நம்பிக்கை இல்லாத எந்தவொரு அரசாங்கத்தினாலும் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என தெரிவித்த அவர், ஜனாதிபதி ஒருவரை எதிர்க்கட்சிக்கு அல்லாமல் வீட்டுக்கு அனுப்பும் நிலைமை உருவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
நாட்டின் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையில் சுமார் 8.5 பில்லியன் டொலர் இடைவெளி காணப்படும் போது இதை 6 மாதங்களில் சீரமைக்க முடியாது எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் தெரிவித்தார்.
இந்த நெருக்கடி நிலைமையானது கடந்த 42 வருடங்களாக காணப்படுவதாக தெரிவித்த அவர், பிரதமர் பதவியில் ரணில் விக்ரமசிங்க பதவி விலகினாலும், தன்னை பிரதமராக நியமிப்பதற்கு ரணில் விக்ரமசிங்கவுக்கு எந்தவொரு அதிகாரமும் இல்லை, அவ்வாறு அதிகாரம் இருந்தாலும் தன்னை பிரதமராக ஜனாதிபதி நியமிப்பார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லையெனவும் சுட்டிக்காட்டினார்.
இந்த நெருக்கடியில் இருந்து நாம் நாட்டை மீட்டெடுக்க வேண்டுமானால், குறுகிய காலத்திற்கு அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை சமநிலைக்கு கொண்டுவந்து, அதன் பின்னர் பொதுத் தேர்தலொன்றுக்கு செல்வதன் ஊடாக மக்களின் நம்பிக்கையை வென்றவர்கள் ஆட்சியமைக்க முடியும் என்றார்.