எதிர்வரும் 7 ஆம் திகதிக்குள் ஜனாதிபதி பதவியில் இருந்து விலக வேண்டும். இல்லாவிட்டால் அனைத்து தேரர்களையும் கொழும்புக்கு அழைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தேரர் அமைப்புகளின் ஒன்றியம் எச்சரித்துள்ளது.
தேரர்கள் அமைப்புக்களின் ஒன்றியத்தின் 11 தேரர்கள் கைச்சாத்திட்டு ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது
அந்தக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாட்டை தொடர்ந்து அராஜக நிலைக்கு கொண்டு செல்லாமல் எதிர்வரும் 7ஆம் திகதிக்குள் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகவேண்டும்.
பெளத்த மக்களின் வாக்குகளின் மூலம் அதிகாரத்துக்கு வந்து மக்களுக்கு சேவை செய்வதாக ருவன்வெலிசாய புனித பூமியிலும் ஸ்ரீமஹா புத்த பெருமான் நிலைகொண்டுள்ள புனிதபூமியிலும் சத்தியப்பிரமாணம் செய்துவிட்டு,ஜனாதிபதி மக்களை ஏமாற்றி இருக்கின்றார் என்பது நிரூபணம் ஆகிவிட்டது.
ஜனாதிபதி மீது நம்பிக்கை வைத்து பெளத்த தேரர்கள் உட்பட 69 இலட்சம் பெரும்பான்மை மக்கள் ஜனாதிபதியை தெரிவுசெய்து கொண்ட போதும்,தற்போது அந்த மக்களுக்கு ஜனாதிபதி தொடர்பாக கடுகளவேனும் நம்பிக்கை இல்லை. என்று தேரர்கள் தங்களது கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.