** மாரவிலவில் தங்குமிடமொன்றில் 24 பேர் கைது
நாட்டிலிருந்து சட்டவிரோதமாக குடியேற முயன்ற மேலும் 51 பேர் கிழக்கு கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (03) இலங்கையின் கிழக்கு கடற்பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, கடல் வழியாக இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குச் செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும், 51 பேரை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடி படகொன்றை, கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
சட்டவிரோத குடியேற்றம் மற்றும் கடல் வழிகள் ஊடாக கடத்தல்களை தடுக்கும் நோக்கத்துடன், கடற்படையினர் நாட்டைச் சுற்றியுள்ள கடல் மற்றும் கரையோரப் பகுதிகளை உள்ளடக்கிய வழக்கமான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, இன்று (03) திருகோணமலைக்கு கிழக்கே உள்ள கடற்பகுதியில் கிழக்கு கடற்படை கட்டளையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான பல நாள் இலங்கை மீன்பிடி படகொன்று சோதனையிடப்பட்டது. இலங்கையில் இருந்து கடல் வழியாக வெளிநாட்டுக்கு பல நாள் மீன்பிடி கப்பலில் அழைத்துச் செல்ல உதவியதாக சந்தேகிக்கப்படும் 6 பேர் உள்ளிட்ட 41 ஆண்கள், 5 பெண்கள், 5 சிறுவர்கள் உள்ளிட்ட 51 பேர் இவ்வாறு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பகல் மீன்பிடி கப்பல் காவலில் எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இவர்கள், 05 வயதுக்கும் 56 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்பதுடன், யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, கம்பஹா, இரத்தினபுரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நேற்றையதினம் (02) முற்பகல், இலங்கை கடற்படை, இலங்கை கரையோ பாதுகாப்பு திணைக்களம், பொலிஸார் இணைந்து மாரவில பிரதேசத்தில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில், சட்டவிரோதமாக கடல் வழியாக நாட்டிலிருந்து செல்ல தயாராக இருந்ததாக, சந்தேகத்திற்கிடமான வகையில் குறித்த பகுதியில் தங்குமிடமொன்றில் தங்கியிருந்த 08 ஆண்கள், 06 பெண்கள், 10 சிறுவர்கள் உள்ளிட்ட 24 பேர் மற்றும் அவர்கள் தங்கியிருந்த தங்குமிடத்தின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள், 03 மாதங்கள் முதல் 50 வயது வரையான, மட்டக்களப்பு, வாழைச்சேனை, சிலாபம் ஆகிய பிரதேசங்களில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மாரவில பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.



