** கலாநிதி கணேச மூர்த்தி சுட்டிக்காட்டு
** எரிபொருள் விநியோகத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் ஈடுபட முன் வந்தால் சாதகம்
எரிபொருள் இல்லாமல் நாட்டின் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்து நாடு முடங்கும் பட்சத்தில், அது கொரோனா காலத்து முடக்கத்தை விட பாதிப்பு மிகுந்ததாக அமையும் என்று, பொருளாதார நிபுணரும் கொழும்பு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான எஸ் கணேசமூர்த்தி கூறினார்.
“கொரோனா காலத்து முடக்கத்தின்போது நாட்டில் பொருட்களுக்கு தட்டுப்பாடு இருக்கவில்லை. எரிபொருள் தாராளமாக கிடைத்தது. எனினும் தற்போது எரிபொருள் இன்றி நாடு முடங்கும் பட்சத்தில் பாரியளவு தாக்கத்தை நாட்டுக்கு ஏற்படுத்தும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கும் போது,
“நாட்டுக்கு 22 ஆம் திகதி வரை எரிபொருள் கப்பல்கள் வராது என்று அறிவிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், கையிருப்பில் இருக்கின்ற எரிபொருள் மூன்று வாரங்களுக்கும் தாக்கு பிடிக்காது. எனவே, அத்தியாவசிய சேவைகள் கூட, அடுத்து வரும் வாரங்களில் முடங்கும் அபாயம் காணப்படுகின்றது. தற்போது போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்திருக்கின்றது. தனியார் பஸ் சேவை 10 வீதமே இடம்பெறுகின்றது. எனவே, போக்குவரத்து முடங்கும் பட்சத்தில், மக்களின் நடமாட்டம் ஸ்தம்பிதமடையும். இதனால், மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை முழுமையாக பாதிக்கப்படும் அபாயம் இருக்கின்றது “என்று கணேசமூர்த்தி சுட்டிக்காட்டினார்.
தற்போது மாற்று வழியாக மக்கள் துவிச் சக்கர வண்டிகளை பயன்படுத்த ஆரம்பிப்பதை காண முடிகின்றது. ஆனால், ஒரு துவிச்சக்கர வண்டியின் விலையும் 50,000 ரூபாவை தாண்டி இருக்கிறது.எனவே, இதன் மூலம்,உடனடி மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது.
நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற இந்த நிலைமை ஒரு சிக்கலான சூழ்நிலையை ஏற்படுத்தி காட்டுகிறது. எரிபொருள் துறையில் சர்வதேச நிறுவனங்களை கொண்டு வரும் முயற்சிகளும் இடம் பெறுகின்றன. அது ஒரு ஆரோக்கியமான விடயமாக காணப்படுகின்றது.
1963 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நிறுவனங்கள் எரிபொருள் தொழிலில் ஈடுபட்டன. பின்னர் அவை சுபீகரிக்கப்பட்டு, தேசிய மயமாக்கப்பட்டதோடு வெளிநாட்டு நிறுவனங்கள் மட்டுப்படுத்தப்பட்டு இருந்தன.
இன்றைய நெருக்கடி நிலையில், சர்வதேச நிறுவனங்கள் வரும் பட்சத்தில், விலை அதிகரித்தாலும் கூட, சீரான எரிபொருள் விநியோகத்துக்கு சந்தர்ப்பம் கொடுக்கும் என தெளிவுபடுத்தினார் கலாநிதி கணேச மூர்த்தி.