(கனகராசா சரவணன்)
மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் வீடு ஒன்றின் கூரையை உடைத்து வீட்டிற்குள் உள்நுழைந்த 22 வயதுடைய இளைஞன் ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து நையப் புடைத்ததோடு பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவம் இன்று சனிக்கிழமை (02) அதிகாலை 2 மணி அளவில் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் சம்பவதினமான நேற்று இரவு வீட்டில் அனைவரும் உறங்கிய நிலையில் அதிகாலை 2 மணிக்கு வீட்டினுள் சத்தம் ஒன்று கேட்டதையடுத்து விழித்துக் கொண்ட வீட்டு உரிமையாளர் உடனடியாக எழுந்து சத்தம் இன்றி அவதானித்தபோது கொள்ளையன் ஒருவர் வீட்டினுள் இருப்பதை கண்டு உடனடியாக அயலவர்களின் உதவியுடன் குறித்த கொள்ளையன் அங்கிருந்து தப்பி ஓட முடியாமல் சுற்றிவழைத்து மடக்கிப் பிடித்ததோடு நையப் புடைத்தனர்.
இதனையடுத்து மடக்கி பிடித்த கொள்ளையனை பொலிசாரிடம் ஒப்படைத்ததையடுத்து குறித்த கொள்ளையன் கிழக்கில் பல கொள்ளைகளுடன் தொடர்புடைய அம்பாறை இறக்காமத்தைச் சேர்ந்த 22 வயதுடையவன் எனவும் திருகோணமலை, மட்டக்களப்பு , கல்முனை உட்பட பல பிரதேசங்களில் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக 20 க்கு மேற்பட்ட வழக்குகள் இருப்பதாகவும்
கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் காத்தான்குடி பிரதேசத்தில் கையடக்க தொலைபேசி கடை ஒன்றை உடைத்து அங்கிருந்து 75 க்கு மேற்பட்ட கையடக்க தொலை பேசி கொள்ளைச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டு 3 மாதங்கள் சிறையில் இருந்த நிலையில் நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளதாகவும் காத்தான்குடி பிரதேசத்தில் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கிருந்து வந்துள்ளதாகவும் அங்கிருந்து 3 கையடக்க தொலை பேசிகள் ஏ.ரி.எம் வங்கி இயந்திர அட்டைகளை மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.