Tuesday, 6 December, 2022
yaraglobal
Homeஉள்நாட்டுமரணப்படுக்கையில் இலங்கை

மரணப்படுக்கையில் இலங்கை

ஆராய்கிறார் பொருளியலாளர்
கலாநிதி ஏ.எல்.எம்.அஸ்லம்

** கொள்கை வகுப்பாளர்களின் எச்சரிக்கை மறுப்பே
இன்றைய நெருக்கடி

** இனவாத சிந்தனை மதி மயக்கமும் நெருக்கடிக்கு இன்னொரு காரணம்

** சர்வதேச பொருளாதார உறவுகளை புறம்தள்ளியமையின் விளைவையே நாம் எதிர்கொள்கிறோம்

இலங்கையில் உருவெடுத்துள்ள பொருளாதார நெருக்கடி 2019ம் ஆண்டு ஆரம்பித்து தற்போது முழு இலங்கையையும் ஆட்கொண்டுள்ளது. இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னர் உருவான மிக மோசமான பொருளாதார நெருக்கடி இதுவென்று பொருளியலறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

இப்பொருளாதார நெருக்கடி,தவிர்க்க முடியாத பணவீக்கம், அந்நியச்செலாவணிக் கையிருப்புக் குறைவு, மருத்துவப் பொருட்களின் பற்றாக்குறை மற்றும் அத்தியவசியப் பொருட்களின் விலையுயர்வு என்பனவற்றுக்கு வழிவகுத்துள்ளது. வரிக்குறைப்பு, பண உருவாக்கம், பசுமை விவசாயத்திற்கு மாறுவதற்கான நாடுதழுவிய கொள்கை, ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் மற்றும் கோவிட்- 19 தொற்று நோயின் தாக்கம் போன்ற கூட்டுக் காரணிகள் பொருளாதார நெருக்கடிக்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், இக்காரணிகளன்றி இன்னும் இனங்காணப்படாத சில காரணிகள் இப் பொருளாதார நெருக்கடிக்கு காரணமாகியுள்ளன.​​


இது மக்கள் மத்தியில் போரட்டம் வெடிப்பதற்கும் ஜனாதிபதியை வீட்டுக்குச் செல்ல கோஷமிடுவதற்கும் வழிகோலியுள்ளது.
இவ்வருட மார்ச் மாத நிலவரத்தினடிப்படையில், இலங்கையின் மீதமாயுள்ள 1.9 பில்லியன் அமெரிக்க டொலருக்கான அந்நியச் செலாவணிக் கையிருப்பு உண்மையில்,இலங்கையின் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த போதுமானதல்ல. ஏனெனில் கடன் தொகை 4 பில்லியன் அமெரிக்க டொலராகக் காணப்பட்டது. இத்தகைய நிலை இலங்கையின் மொத்த இறையான்மையை கடனுக்கே ஒதுக்கீடு செய்ய வேண்டிய தேவைப்பாட்டைத் தோற்றுவித்துள்ளது. புளும்பேர்க் அறிக்ககையின்படி, இலங்கை 2022ம் ஆண்டு மொத்தமாக 8.6 பில்லியன் அமெரிக்க டொலரை கடனாகத் திருப்பிச் செலுத்தவேண்டியுள்ளது. இத்தொகை உள்ளுர் மற்றும் வெளிநாட்டுக் கடன்தொகையினை உள்ளடக்கியுள்ளது.

1948ம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து அதன் வரலாற்றில் கடந்த ஏப்ரல் 2022ம் ஆண்டே இறையான்மை இயல்பு நிலை (சோர்வேஜின் டிபோல்ட்) என்ற நிலைக்குள் நுழைந்துள்ளது.

அதுமட்டுமன்றி,21ம் நூற்றாண்டில் ஆசியப் பசுபிக் பிராந்தியத்தில் இந்நிலைக்குள் நுழைந்த முதல் அரசு இலங்கையாகும்.

இதேவேளை,இதனை உறுதிப்படுத்தும் முகமாக தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் ஜூன் 2022 இல் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது, இதனால் அத்தியவசியப் பொருட்களுக்கு பணம் செலுத்த முடியவில்லை என்று கூறினார்.


இலங்கை மத்திய வங்கியின் முன்னைநாள் ஆளுநர் டபிள்யூ. ஏ. விஜயவர்த்தன அவர்களின் கூற்றின்படி, 2015 இல் பொருளாதார நெருக்கடிக்குள் நீண்ட தூரத்தில் இலங்கை காணப்பட்டது.இதனை ஆட்சிக்கு வந்த அரசாங்கம் அறிந்திருந்தது. இலங்கையின் கொள்கை ஆய்வுகள் நிறுவனத்தால் பல அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டடிருந்தன என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். 2015ல் ஆட்சியிலிருந்த அப்போதைய பிரதமர் நிலைமையை நிவர்த்தி செய்ய வலுவான பொருளாதாரக் கொள்கையை முன்வைத்தபோதும், தற்போதைய கூட்டரசாங்கம் பாராளுமன்றத்தில் எந்தவொரு கொள்கையையும் இதுவரையில் முன்வைக்கவில்லை.

இது நிலைமையை மேலும் சிக்கலாக்கியதேயன்றி ஒரு தெளிவான தீர்வு நோக்கிய கொள்கையை உருவாக்கவில்லை. அதாவது, கொள்கைக் குழப்பத்தையே உருவாக்கும். ஏனெனில், கூட்டரசாங்கத்தில் இருந்தவர்களின் பிரதான நோக்கம் இனவாதமேயன்றி வேறொன்றுமில்லை. இதனால்தான் கூட்டரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட மத்திய வங்கி ஆளுநர் அஜிட் நிவாட் கப்ரால் பண அச்சடிப்பானது, பணவீக்கத்தை தோற்றுவிக்காது என்று பொருளாதாரக் கோட்பாட்டையே பொய்ப்பித்து
அவரது கல்வித்தரத்தை கீழ்நிலைப்படுத்தினார்.


இவரே கூட்டரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு ஒரு காரணி என்பது அரசியல் பொருளாதார ஆய்வாளர்களின் கருத்ததாகும். இதற்கு ஒருபடி மேற்சென்று தற்போதைய அரசாங்கமானது முன்னிருந்த அரசின் நிதியமைச்சரான ரவிகருணாநாயக்க அவர்களின் நடவடிக்கையும் இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமாயிருந்தன என்று குறிப்பிடுகின்றது.
தற்போது ஆட்சியிலிருக்கும் அரசு ஆட்சிக்கு வந்தவுடன் அரசியல் அமைப்பினை திருத்தி ஒரு நாடு ஒரு சட்டம் என்ற கோஷத்தை முன்வைத்து நாட்டில் வாழுகின்ற பெரும்பான்மை மக்களுக்கும் சிறுபான்மை மக்களுக்குமிடையில் ஒரு முறுகல் நிலையினைத் தோற்றுவித்து,தமது ஆட்சிக்காலத்தை கொண்டு செல்லலாம் என்று நினைத்தனர்.

அதற்கு பௌத்த தேரர்கள் குறிப்பாக ஞானசார தேரர் போன்றவர்கள் மற்றும் இனவாத சிந்தனையுள்ளவர்களை ஆதரவாக்கிக் கொண்டனர். ஆனால்,இவர்கள் ஒரு நாட்டின் முதுகெலும்பான பொருளாதாரம் குறிப்பாக சர்வதேச பொருளாதார உறவுகளை புறந்தள்ளியமையின் விளைவே இன்றைய இலங்கையின் மரணப்படுக்கை என்று மேற்கு ஐரோப்பிய பொருளாதார நிபுணர்கள் அண்மையில் குறிப்பிட்டிருந்தனர்.

இதனை ஒரு உண்மையான கூற்றாகவே நோக்கவேண்டியுள்ளது. ஏனெனில், தற்போதைய அரசின் பிரதான வெளிநாட்டு உறவுக்காரர்களாக இருந்தவர்கள் மற்றும் இருப்பவர்கள் சீனா மற்றும் இந்தியாவாகும். இதற்காகவே, இலங்கை கொழும்பு துறைமுக நகரத்தை சீனாவுக்கும் திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணத்தின் இறையான்மைக்குள் இந்தியாவையும் உள்நுழைவதற்கு இடம் கொடுத்தது.

இதனால் ஏனைய நாடுகளின் உறவுகளை புறந்தள்ளி அந்நாடுகளின் உதவி மற்றும் கடன்களை பெற்றுக் கொள்வதிலிருந்து இடைவிலகியது. இதிலிருந்து எமக்கு வெளிப்படையாக விளங்குவது தற்போதைய கோட்டாபாய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் போன்ற நடவடிக்கைகளில் தன்னை உட்கொண்டு பொருளாதர எச்சரிக்கைகள் மற்றும் வரவிருக்கும் வெளி ஆபத்துக்களை போதுமான அளவு கையாளத் தவறிவிட்டது என்பதாகும். எனினும், 2014ம் ஆண்டு ஆட்சிபீடம் ஏறிய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் நிதிப் பண ஒருங்கிணைப்பு திட்டத்தின் கீழ் பல சீர்திருத்தங்களை மேற்கொண்டு பணவீக்கத்தை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியிருந்தது என்பதனையும் இச்சீர்திதருத்தங்களில் ஒரு தானியங்கி எரிபொருள் விலைசூத்திரம் அடங்கியிருந்ததோடு பெறுமதி சேர் வரியினை பதினொரு சதவீதத்திலிருந்து பதினாறு சதவீதத்திற்கு அதிகரித்திருந்தமையினையும் இவ்விடத்தில் குறிப்பிட்டேயாகவேண்டும்.

எனினும் இதனை தற்போதைய ஆளும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்பதே கவலைக்குரிய விடயமாகும். ஏனெனில். ஒரு அரசின் பிரதான கடமை நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதாகும். இதனை தற்போதைய ஆளும் அரசாங்கம் செய்யத் தவறிவிட்டது.


திறைசேரிச் செயலாளர் மற்றும் அரசின் எந்தவொரு உறுப்பினரையும் நாணயச் சபையின் உறுப்பினர்களாக வருவதனைத் தடைசெய்து மத்திய வங்கியை அரசியல் தலையீடின்றி சுயாதீனமாக இயங்குவதற்கான சட்டமூலத்தை தற்போதைய அரசாங்கத்திற்கு முன்னிருந்த நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்டிருந்த போதிலும்,அதனை அப்போது எதிர்க்கட்சியாக இருந்த தற்போதைய அரசாங்கம் நிராகரித்திருந்தது. இச்சட்டமூலமானது இலங்கை மத்திய வங்கியானது அரசினால், அரசிக்குச் சொந்தமான நிறுவனத்தினால், அல்லது முதன்மைச் சந்தையினால் வெளியிடப்பட்ட பாதுகாப்பு முறிகளை அல்லது பத்திரங்களை கொள்வனவு செய்யக்கூடாது என்று குறிப்பிடுகிறது. இதன் மூலம்,தேவையற்ற பண அச்சடிப்புகள் கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். ஆனால், இச்சட்ட மூல நிராகரிப்பு இலங்கை மத்திய வங்கியை மேலும் அரசியல் மயப்படுத்தியது.

அப்போதிருந்த மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, இச்சட்டமூல நிராகரிப்பு சென்மதி நிலுவைப் பிரச்சினை, அதிகரித்த பணவீக்கம் மற்றும் சொத்துக்களின் தளம்பல் போன்றவற்றை துரிதப்படுத்தும் என்று குறிப்பிட்டிருந்தார்.


இலங்கையின் இன்றைய பொருளாதார நெருக்கடி வலது மற்றும் இடது சாரிக் கொள்கைகளைப் பின்பற்றுகின்ற இரு அரசுகளின் பணிப்போரின் விளைவு என்று அரசியல் பொருளியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

எனினும் தற்போதைய அரசாங்கத்திற்கு ஏலவே இலங்கைப் பொருளாதாரம் நெருக்கடிக்குள் சிக்கப்போகின்றது என்ற அபாய ஒலி,பொருளாதார வல்லுனர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களால் எழுப்பப்பட்டிருந்த போதிலும்,அதனைப் பொருட்படுத்தாமல் தமது இனவாத சிந்தனையினால் மதிமயங்கியிருந்தமையே இன்று இலங்கை மக்கள் அனுபவிக்கும் விலையேற்றம் மற்றும் பொருட்தட்டுப்பாட்டு பிரச்சினையாகும்.

yaraglobal
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments