நாசா வேலையை புறந்தள்ளி தேசத்திற்காக இஸ்ரோவில் நுழைந்த விஞ்ஞானி ஒருவரின் சொல்லப்படாத கதை தான் ‘ராக்கெட்ரி நம்பி விளைவு’.
ராக்கெட் தொழில்நுட்பத்தில் அதீத ஆர்வம் கொண்ட நம்பி நாரயணன் (மாதவன்), உலகப் புகழ் பெற்ற அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைகழகத்தில் கெமிக்கல் ராக்கெட் புரோபல்ஷன் தொடர்பான ஆராய்ச்சியை முடிக்கிறார். இதைதொடர்ந்து அவருக்கு அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசாவில் பணிபுரிய அவருக்கு வாய்ப்பு கிடைக்கிறது. அதைப் புறந்தள்ளி அவர் இந்தியா திரும்புகிறார்.
இஸ்ரோவில் இணைந்து இந்தியாவின் ராக்கெட் தொழில்நுட்பத்திற்காக அவர் ஆற்றும் பங்கு, அதையொட்டி நடக்கும் சில விரும்பத்தகாத நிகழ்வுகள், அதனால் ஏற்படும் பாதிப்பு என விரிகிறது ‘ராக்கெட்ரி நம்பி விளைவு’ படத்தின் திரைக்கதை.
நம்பி நாராயணனாக மாதவன். வெளுத்த தாடி, வெளியில் தெரியும் தொப்பை, வசன உச்சரிப்பு, உடல்மொழி என உண்மையான விஞ்ஞானி நம்பி நாராயணனை நடிப்பின் மூலம் பிரதியெடுத்திருக்கிறார். இளமையிலிருந்து முதுமை வரையிலான ஒருவரின் வாழ்க்கை பயணத்தின் காலக்கட்டத்தை ஒவ்வொன்றாக தன் உடல்மொழியிலும் கெட்டப்பிலும் காட்சிபடுத்தியதில் மெனக்கெட்டிருக்கிறார்.
அவருக்கு அடுத்தபடியாக மீனா நாராயணனாக நடித்திருக்கும் சிம்ரன் நடிப்பில் மிரட்டியிருக்கிறார். குறிப்பாக ஒரிடத்தில் யாரும் எதிர்பார்க்காத வேளையில், திடீரென பொங்கி எழும் அவரது நடிப்பு நம்மை உலுக்கிவிடுகிறது.
( நன்றி :இந்து தமிழ் )

