அரசாங்கம் நாடு முடக்கப்படவில்லை என்று அறிவித்திருந்தாலும், கொழும்பு மாநகர் இன்று வாகன போக்குவரத்துக்கள் முழுமையாக குறைந்த நிலையில் வெறிச்சோடி, சோபை இழந்த நிலையிலேயே காணப்படுகின்றது.
ஆசியாவிலேயே 24 மணி நேரமும் விழித்திருக்கும் நகராகவே கொழும்பு மாநகர் மிளிர்ந்தது. என்றாலும், மனிதர்கள் நடமாட்டம் குறைந்து களை இழந்து கிடக்கின்ற ஒரு நகரமாக இன்று மாறியிருக்கிறது.
உலகத்திலே வறுமைக்கு சோமாலியா உட்பட பல ஆபிரிக்க நாடுகளை குறிப்பிடுவார்கள். ஆனால் இலங்கையில் இப்பொழுது ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடி நிலை போல், அந்த நாடுகளில் ஏற்பட்டதாக , தகவல்கள் இல்லை.
இலங்கையில் எரிபொருள் முற்றாகவே இல்லாத நிலையிலேயே மக்கள் அல்லோலகல்லோல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
தனியார் வாகன போக்குவரத்துக்கள் முற்றாக முடக்கப்பட்ட நிலையில், பொதுப் போக்குவரத்து – இலங்கை போக்குவரத்து சபை பஸ்களும் ஒருசில தனியார் பஸ்களும் இன்று காலை வீதிகளில் சேவையில் ஈடுபட்டதை காண முடிந்தது. பாடசாலை முற்றாக மூடப்பட்ட நிலையில்,அலுவலகங்களுக்குச் செல்வோர் படுகின்ற துன்பங்கள் சொல்லில் அடங்காதவை.
கொழும்பு மாநகரில் அரிதாக வருகின்ற இந்த பொது போக்குவரத்தில் ஏறுவதற்கு முண்டியடித்து விழுந்து எழும்புவர்கள் ஏராளம். பலர் காயம் அடைந்து வீடுகளுக்கு திரும்பி செல்கின்றார்கள்.
சாதாரணமாக சொகுசு வாகனங்களில் சென்று வந்து பழக்கப்பட்டவர்களுக்கு, பொதுப் போக்குவரத்தில் முண்டியடித்து ஏறுவது என்பது முடியாத காரியமாகவே இருக்கிறது.
எப்பாடுபட்டாலும் அலுவலகம் சென்று பணியாற்ற வேண்டும் என்ற உறுதியோடு செல்பவர்கள் படுகின்ற அவலங்களை பார்க்கின்றபோது, மிகவும் கஷ்டமாக இருக்கிறது.
உண்மையில்,முழுமையான முடக்கம் ஒன்று அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட து போன்ற ஒரு தோற்றத்திலேயே கொழும்பு மாநகரம் காட்சியளிக்கின்றது. கொரோனா உச்சம் பெற்றிருந்த காலத்தில் அரசாங்கம் நாட்டை முடக்கி இருந்தது. அந்த வேளையில் கூட, கொழும்பு மாநகரம் இவ்வாறு உறங்கியது இல்லை.
சமையல் எரிவாயு இல்லாததும் நாட்டை கடுமையாக தாக்கி இருக்கின்றது. காலசுழச்சியில் நவீனத்துவத்துக்குள் புகுந்து, சமையல் எரிவாயு பழக்கப்பட்டு போன மக்கள், மீண்டும் விறகை பயன்படுத்துவதற்கு தொடங்கி இருக்கிறார்கள்.
விறகு அடுப்பு பயன்பாடு என்பது இளைஞர், யுவதிகளுக்கு மிகவும் ஒரு சங்கடமான நிலையை இலங்கையில் ஏற்படுத்தியிருக்கிறது. புகைக்குள் இருந்து பழக்கப்பட்ட ஒரு சமூகமாக இளம் சந்ததி இல்லை என்பதுதான் யதார்த்தமான உண்மை.
கிராமப்புறங்களில் வாழுகின்ற மக்கள் சமையல் எரிவாயுக்கு முண்டியடித்துக்கொண்டு நின்றாலும், விறகு,உமி,மரத்தூள் போன்றவற்றை பயன்படுத்தி ஒருவகையில் சமையலை சமாளித்துக் கொள்கிறார்கள்.
கொழும்பு மாநகரின் நிலை இந்த இடத்தில் மிகவும் பரிதாபமாகவே இருக்கின்றது.
ஒன்று விறகு கிடைப்பது அரிது. அப்படித்தான் கிடைத்தாலும் அதனை வைத்து அடுப்பு மூட்டுவது என்பது முடியாத காரியம். தொடர் மாடி வீடுகளில் வசிப்பவர்கள் விறகு அடுப்பை பயன்படுத்தக் கூடாது என்று சட்டமும் இருக்கிறது.
என்றாலும், மற்றவர்களுக்கு தொல்லை இல்லாத நிலையில், கொழும்பில்,சிலர் விறகு அடுப்பை பயன்படுத்த தொடங்கி இருக்கிறார்கள்.
வடிகான்களுக்கு அருகிலும் வீதி ஓரங்களிலும் மரநிழல்களுக்கு கீழும் சிலர் விறகு அடுப்பை பயன்படுத்துவதை கொழும்பில் நாம் காணக்கூடியதாக இருக்கின்றது. இதன் மூலம் புகை வருவதாக முறைப்பாடு செய்பவர்களும் இருக்கிறார்கள்.
இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து இப்படியான ஒரு மிகக் கொடூரமான நெருக்கடி நிலையை தாங்கள் பார்க்கவில்லை என்றே, சிரேஷ்ட பிரஜைகள் அடிக்கடி கூறுகிறார்கள். இந்த மோசமான நிலையும் வாழ்க்கையின் யதார்த்தத்தை மக்களுக்கு புரிய வைத்திருக்கிறது ; கற்றுக் கொடுத்திருக்கிறது என்ற உண்மையையும் நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.