லண்டன்: நடப்பு விம்பிள்டன் தொடரில் முதல் சுற்றோடு நடையை கட்டியுள்ளார் அமெரிக்க நட்சத்திர டென்னிஸ் விளையாட்டு வீராங்கனை செரீனா வில்லியம்ஸ்.
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் சாம்பியன்ஷிப்புக்கான நடப்பு தொடர் இங்கிலாந்தில் கடந்த 27-ம் திகதி தொடங்கியது. இதில் டென்னிஸ் விளையாட்டு உலகில் ஆதிக்கம் செலுத்தி வரும் முன்னணி வீரர்களும், வீராங்கனைகளுக்கு பங்கேற்றுள்ளனர். 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள செரீனா வில்லியம்ஸும் பங்கேற்றார். டென்னிஸ் உலகை தங்கள் ராக்கெட்டுகளால் (பேட்) ஆட்சி செய்த வில்லியம்ஸ் சகோதரிகளில் இளையவர் இவர்.
40 வயதான அவர் சுமார் ஓராண்டு காலத்திற்கு பிறகு மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் விளையாடினார். முதல் சுற்றில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 24 வயது வீராங்கனை ஹார்மனி டானை (Harmony Tan) எதிர்த்து விளையாடினார். இதுதான் ஹார்மனி பங்கேற்று விளையாடும் முதல் விம்பிள்டன் தொடர்.
சுமார் 3 மணி நேரம் 10 நிமிடங்கள் வரை நடைபெற்ற இந்த போட்டியில் 5-7, 6-1, 6-7 (7/10) என ஆட்டத்தை இழந்தார் செரீனா.
மேலும் அவர் தனது கன்னத்தில் கருப்பு நிற டேப் ஒன்றை அணிந்திருந்தார். எதற்காக அவர் இதனை அணிந்துள்ளார் என ரசிகர்கள் கேட்டு வந்தனர். சைனஸ் பிரச்சினையால் அவதிப்பட்டு வரும் செரீனா, மூக்கு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வலியை குறைக்கும் வகையில் அணிந்து விளையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.