டெக்சாஸ்: டெக்சாஸ் மாகாணத்தில் ட்ரக்கில் 46 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் பைடனே காரணம் என்று அம்மாகாண ஆளுநர் குற்றச்சாட்டியுள்ளார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் சான் அன்டோனியோ நகரில் ஒரு ரயில்வே ஸ்டேஷன் அருகில் இந்த ட்ரக் கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. போலீஸார் அதனை திறந்தபோது உள்ளே மூச்சுத் திணறி உயிரிழந்த நிலையில் 46 பேர் சடலமாக கிடந்தனர்.அவர்கள் அனைவரும் மெக்சிகோ நாட்டில் இருந்து அகதிகளாக அமெரிக்காவில் குடியேற முயன்றவர்கள் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் 46 பேரின் சடலம் கண்டறியப்பட்ட ட்ரக்கை சோதித்த மீட்புப் பணி உயரதிகாரி கூறும்போது, “ இறந்தவர்களின் உடல்கள் மிகவும் சூடாக இருந்தது. அவர்கள் கடுமையான வெப்பத்தினால் சோர்வடைந்துள்ளனர். மேலும் அந்த ட்ரக்கில் தண்ணீர் இருந்ததற்காக எந்த அறிகுறியும் இல்லை. காற்று வசதியும் இல்லை” என்று தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக மூன்று பேரை கைது செய்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் டெக்சாஸ் மாகாண ஆளுநர் கிரெக் அபோட் கூறும்போது, “ 46 பேர் பலியாகி உள்ளனர். இந்த மரணங்களுக்கு அமெரிக்க அதிபர் பைடன் தான் பொறுப்பேற்க வேண்டும். அமெரிக்கா – மெக்சிகோ எல்லைப் பிரச்சினையில் பைடனின் மோசமான கொள்கையே இதற்குக் காரணம்” என்று தெரிவித்தார்.
அமெரிக்காவில் இம்மாதிரியான உயிரிழப்புகள் இது முதல் முறை அல்ல. 2021 ஆம் ஆண்டு மெக்சிகோவிலிருந்து தெற்கு டெக்ஸாஸ்க்கு வந்த 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
மெக்சிகோவில் இருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறுகின்றனர். இதைத் தடுக்க சுமார் 650 மைல் தொலைவுக்கு பல்வேறு வகைகளில் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சட்டவிரோத குடியேற்றம் தொடர்கதையாக உள்ளது.