பொலன்நறுவை மாவட்டத்திலுள்ள வெலிக்கந்தை கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் மரணமடைந்துள்ளதோடு, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த 500 இற்கும் அதிகமானோர் தப்பியோடியுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இவ்வாறு தப்பிச் சென்றுள்ளவர்களை தேடி பொலிஸார் மற்றும் இராணுவம் தேடுதல் நடவடிக்கை எடுத்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
போதைப்பொருளுக்கு அடிமையான நபர்களுக்கு புனர்வாழ்வளிப்பதான கந்தக்காடு நிலையத்தில் தங்கியிருந்து புனர்வாழ்வு பெற்று வந்த நபர் ஒருவர் நேற்றிரவு (28) சந்தேகத்திற்கிடமான வகையில் மரணமடைந்துள்ளமை தொடர்பில், வெலிக்கந்தை பொலிஸ் நிலையத்தின் இன்றையதினம் (29) அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் விசாரணைக்காக பொலிஸ் குழுவினர் அங்கு சென்ற நிலையில், அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் அமைதியற்ற வகையில் செயற்பட்டதைதத் தொடர்ந்து, நிலையத்தின் தடுப்பு வேலிகளை உடைத்து 500 இற்கும் அதிகமானோர் தப்பிச் சென்றுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதற்கான பாதுகாப்பு கடமையை இராணுவத்தினர் மேற்கொண்டுள்ளதோடு, இதன்போது அங்கு சுமார் 1,000 கைதிகள் இருந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு தப்பிச் சென்றவர்களை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மேற்கொண்டுள்ளனர்