ரவி உள்ளிட்ட 7 பேரின் மனுக்கள்; மேன்முறையீட்டு நீதிமன்றின் உத்தரவு!

0
13

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பிரதிவாதிகள் 7 பேரை கைது செய்வதற்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை சட்ட வலுவற்றதாக்குமாறு கோரி, தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை முன்கொண்டு செல்வது தொடர்பில், எதிர்வரும் மே மாதம் 7ஆம் திகதி சமர்ப்பணங்களை முன்வைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியினால் முன்னெடுக்கப்பட்ட முறிகள் ஏலத்தின் போது 50 பில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய முறிகள் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பிரதி மன்றாடியர் நாயகம் மிலிந்த குணதிலக மன்றுரைத்துள்ளார்.

இதற்கமைய, குறித்த மனுவை தொடர்ந்தும் முன்கொண்டு செல்வதற்கான அவசியம் தொடர்பில் கேள்வி எழுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமது தரப்பினரை கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணை மற்றும் பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் சமர்ப்பித்துள்ள அறிக்கை, குறித்த வழக்கின் கீழ் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் சார்பில் மன்றில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி மன்றுரைத்துள்ளார்.

தமது தரப்பினரின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளதாகவும் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையால் ஆலோசனை பெற்றுக் கொள்வதற்கு கால அவகாசம் வழங்குமாறும் அவர் மன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த வழக்கை எதிர்வரும் மே மாதம் 7ஆம் திகதி மீள அழைப்பதற்கு தீர்மானித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here