ரமழானிய அமல்களும் முஸ்லிம் சமூகமும்.

0
2

 அஷ்ஷைக் பழீல்

பள்ளிவாசல்களது பங்குபள்ளிவாயல்கள் சமூகத்தை அல்லாஹ்வுடன் இணைக்கும் பாலங்கள் என்ற வகையில் ரமழான் காலத்தில் அங்கு இடம்பெற வேண்டிய சில அமல்கள் பற்றிய சில அபிப்பிராயங்கள்:-

1. பள்ளிவாயலில் ஒவ்வொரு ஜமாஅத் தொழுகை முடிந்த பின்னரும் இரண்டு வரிகள் கொண்ட ஒரு ஹதீஸை அரபில் வாசித்து அதன் மொழிபெயர்ப்பையும் கூறுவது.
2. ஒவ்வொரு இரவு தராவீஹ் முடிவடைந்த பின்னர் வித்ர் தொழுகைக்கு முன்னர் ஆன்மீக உணர்வுகளை பலப்படுத்தும் தலைப்பொன்றில் ‘காதிரா’ ஒன்றைச் செய்வது.(10நிமிடங்கள் மட்டும்)
3. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பகல் 11 மணி முதல் 12 மணி வரை பள்ளி வாசலில் பெண்களுக்கான விசேட மார்க்க சொற்பொழிவு. பிரதேச மெளலவியாக்களால் நடத்தப்படும். தொழுகையை பெண்கள் பள்ளிவாயல் மேல் மாடியில் தொழுது விட்டு வீட்டுக்கு செல்வார்கள்.
4. சனிக்கிழமைகளில் 11 மணி முதல் 12 மணி வரை பிரதேச இளைஞர்களுக்கான நிகழ்ச்சி. இளைஞர்களுடன் நேரடியாக தொடர்பான தலைப்புகளை உளவள ஆலோசகர்கள் நடத்துவார்கள்.
5. ளுஹர் தொழுகையின் பின்னர் 7 முதல் 12 வயதுக்குட்பட்ட ஆண் பிள்ளைகளுக்கு இஸ்லாமிய வரலாற்றுச் சம்பவங்களை எடுத்துக் கூறும் மஜ்லிஸ்கள். பெண் பிள்ளைகளுக்கு உகந்த வேறு ஏற்பாடுகள் செய்யப்படலாம்.
6. மஹல்லாவாசிகளை மட்டும் உள்ளடக்கிய வாட்ஸ்அப் குரூப் ஒன்றை ஆரம்பித்து மார்க்க நிகழ்ச்சிகளை மட்டும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்வது.
7. இந்த நாட்டில் வாழும் ஏனைய சமூகங்களுடன் நல்லுறவைப் பேணும் வகையிலான நட நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வது
8. 10, 17, 27 ஆகிய இரவுகளில் விஷேட பயான் நிகழ்ச்சிகளை நடத்துவது (30 நிமிடங்கள் மட்டும்)
9. அன்றாட வாழ்வோடு சம்பந்தப்பட்ட பிக்ஹ் சட்டங்கள் பற்றிய வகுப்புக்களை நடாத்துவது.
மிக முக்கியமான குறிப்பு
பள்ளிவாசல்களுக்கு வருகை தருவோரை கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பாதுகாப்பதற்கு அரசு கடைப்பிடிக்கும் படி கூறியுள்ள அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பது நிர்வாகிகளதும் ஜமாஅத்தாரதும் பிரதான கடமையாகும்.இவற்றைப் பேணத் தவறும் பட்சத்தில் பள்ளிவாசல்களில் மேற்படி அமல்கள் எவ்வகையிலும் சாத்தியப்படமாட்டாடாது.அவற்றை நடாத்துவது சட்ட அடிப்படையிலும் இஸ்லாமிய அடிப்படையிலும் குற்றமாகும்.

வீட்டு அமல்கள்

ஒவ்வொரு வீட்டுக்கும் பள்ளிவாசல் பேஷ் இமாமின் தலைமையிலான, வயது முதிர்ந்த, சமூகத்தில் செல்வாக்கு மிக்க ஐவர் கொண்ட குழுவினர் நேரடியாகச் சென்று பின்வரும் விடயங்களை ஞாபகமூட்டலாம்:-
1. வீட்டில் முழுக்க முழுக்க இஸ்லாமிய சூழலை உருவாக்கி ஆன்மீக மணம் கமழும் காலப்பிரிவாக ரமழானை மாற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் வீட்டுத் தலைவரும் தலைவியும் மேற்கொள்வது.
2. வீட்டிலுள்ள ஒவ்வொருவரும் குர்ஆனின் ஒரு ஜுஸ்உ வை ஒரு நாளில் ஓதி முடிப்பது. ஒவ்வொரு பர்ளான தொழுகைக்குப் பின்னரும் நான்கு பக்கங்கள் ஓதுவதன் மூலம் ‘ஒரு நாளைக்கு ஒரு ஜுஸ்உ’ என்ற குறைந்த பட்ச இலக்கை அடைய முடியும்.
3. வீட்டின் தொலைக்காட்சியை நல்ல, பயனுள்ள நிகழ்ச்சிகளுக்காக மட்டுமே பயன்படுத்துவது.
4. ஐவேளை தொழுகைக்கு பாங்கு சொல்லப்பட்டவுடன் ஆண்கள் உடனடியாக பள்ளிவாசல்களுக்குச் சென்றும் பெண்கள் வீடுகளிலும் தொழுகையை நிறைவேற்றுவது.
5. பகல் கால அதிக தூக்கம், மிதமிஞ்சிய இரவு கால உணவு என்பவற்றை தவிர்ப்பது.
6. உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும் அயல்வீட்டாருக்கும் உதவுவது.
7. இளைஞர்கள் மற்றும் சிறார்கள் வீதிகளில் நின்று அரட்டை அடிப்பதையும் பொருத்தமற்ற இடங்களில் விளையாட்டுகளில் ஈடுபடுவதையும் தவிர்கும்படி உபதேசிப்பது.
8. பள்ளிவாயல்கள் மற்றும் பொது இடங்கள் ஆகியவற்றுக்குச் சென்றால் முழுக்க முழுக்கவும் சுகாதார ஏற்பாடுகளைக் கவனத்திற் கொண்டு நடந்துகொள்ளும் படி கட்டளையிடுவது.
9.ஓய்வாகவோ வேலைகளில் இருக்கும் போதோ இஸ்திக்பார் மற்றும் பொதுவான திக்ருகளில் நாவை ஈடுபடுத்துவது.
10. காலை மாலை மற்றும் சந்தர்ப்ப துஆக்களை தவறாமல் ஓதிவருவது
11.பத்திரிகைகள்,நூல்கள்,சஞ்சிகைகளை வாசிப்பதற்கும் பாடசாலை மற்றும் உயர்கல்வித்துறை சார் மாணவர்கள் தமது பாபங்களை மீட்டுவதற்குமான நேரமொன்றை நாளாந்த நேரசூசியில் உள்ளடக்குவது.
வீடுகளுக்குச் செல்லும் இக்குழுவினர் வீடுகளுக்கு கொடுப்பதற்கான பின்வருவனவற்றின் பிரதிகளை எடுத்துச் செல்ல முடியும்.
நாளாந்த அமல்களை பதிந்து ரமழானின் இறுதியில் ஒவ்வொருவரும் தம்மை சுயமதிப்பீடு செய்வதற்கான முஹாஸபா படிவம்
ரமழானில் கடைப்பிடிக்க வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை பற்றிய குறைந்தது ஒருபக்கத்தை கொண்ட ஒரு ஞாபகக் குறிப்பு.

குறிப்பு:
மேற்படி திட்டத்தை அமுலாக்க பின்வருவோர் பரஸ்பரம் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.:-
பள்ளிவாசல் நிர்வாகிகள்
ஆலிம்களும் ஆலிமாக்களும்
பாடசாலை ஆசிரிய ஆசிரியைகள்
இளைஞர்கள் யுவதிகள்
பெற்றார்
புனித ரமழானை உயர்ந்த பட்சம் நல்ல முறையில் பயன்படுத்தியவர்களது கூட்டத்தில் எம் அனைவரையும் வல்லவன் அல்லாஹ் சேர்ப்பானாக!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here