ரஞ்சனின் வெற்றிடத்தை நிரப்பும் புதிய நாடாளுமன்ற உறுப்பினர் யார்!

0
14

ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற பொதுச் செயலாளர், தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தெரியப்படுத்தியுள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமான வேளை அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

இதற்கமைய வெற்றிடமாகியுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமைக்காக ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட வேட்பாளர் பட்டியலின் அடுத்த இடத்தில் உள்ள அஜித் மான்னப்பெரும நியமிக்கப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் திகதி ரஞ்சன் ராமநாயக்கவிற்கு உயர் நீதிமன்றத்தால் 4 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இதற்கமைய அவரின் நாடாளுமன்ற உறுப்புரிமை இரத்தாவதாக சட்டமா அதிபர், நாடாளுமன்ற பொதுச் செயலாளருக்கு அண்மையில் அறிவித்திருந்தார்.

பின்னர் தமது தண்டனை தீர்ப்பை மீளவும் பரிசீலிக்குமாறு ரஞ்சன் ராமநாயக்க, சட்டத்தரணி ஊடாக உயர் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்த நிலையில் அந்த மனுவும் நிராகரிக்கப்பட்டது.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்புரிமையை நீக்குவதை தடுத்து நீதிப்பேராணையை பிறப்பிக்குமாறு கோரி ரஞ்சன் ராமநாயக்கவால் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

எனினும் அந்த மனுவினையும் விசாரணைக்கு எடுத்து கொள்ளாது மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது.

இதற்கமைய ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை வெற்றிடமாகியுள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன, இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது அறிவித்திருந்தார்.

2020ஆம் ஆண்டு இடம்பெற்ற பொது தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி, கம்பஹா மாவட்டத்தில் 4 ஆசனங்களை பெற்றிருந்தது.

அதில் ரஞ்சன் ராமநாயக்க இரண்டாவது அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்தார்.

எனினும் தற்போது அவரின் நாடாளுமன்ற உறுப்புரிமை வெற்றிடமாகியுள்ள நிலையில், கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்டு 5 ஆவது இடத்தினை பெற்றிருந்த அஜித் மான்னபெரும அந்த வெற்றிடத்திற்காக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here