ஜனாதிபதி கோட்டாபய தலைமையிலான அரசாங்கத்தில், மஹிந்த சிந்தனையை அடிப்படையாக கொண்ட தேசியவாதத்தின் மீது அதிக நம்பிக்கை கொண்டு, “மேட் இன் ஸ்ரீலங்கா” எண்ணக்கருவை மேம்படுத்துவதற்கான தன்னம்பிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
இன்று (13)கொழும்பில் நடைபெற்ற ‘மேட் இன் ஸ்ரீலங்கா’ (Made in Sri Lanka) வர்த்தகக் கண்காட்சியின் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது,
“கௌரவ பிரதமரே, நீங்கள் 2005ஆம் ஆண்டில் இந்நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றதைத் தொடர்ந்து சமூக-பொருளாதார மற்றும் அரசியல் சிந்தனையில் ஒரு பாரிய புரட்சி ஏற்பட்டது. தோல்வியடைய செய்ய முடியாது என்ற பயங்கரவாதத்தை தோல்வியடையச் செய்து காட்டினார்.
“மேலும், தேசியவாதத்துக்கு முன்னுரிமையளித்து நம் நாட்டின் தேசிய பொருளாதாரத்தை தேசியவாதத்துடன் இணைத்து கட்டியெழுப்ப முடியும் என்ற நம்பிக்கையை 2005-2015ஆம் ஆண்டின் ஆரம்பம் வரையான காலகட்டத்தில் நீங்கள் கட்டியெழுப்பி காட்டினீர்கள். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நிறுவியதுடன், கொழும்புத் துறைக நகரையும் நிறுவினீர்கள்.
“மின் உற்பத்தி நிலையங்களை உருவாக்குவதன் மூலம் தேசிய மின்சார தேவையில் 90 சதவீதத்துக்கும் அதிகமானவற்றை வழங்க நடவடிக்கைகள் மேற்கொண்டீர்கள். பொருளாதார வளர்ச்சி வேகம் 6 சதவீதத்துக்கும் மேலாக பராமரிக்கப்பட்டது. அந்த தசாப்தம் இந்த நாட்டின் வரலாற்றில் ஓர் அழகான அத்தியாயம்” என்றார்.
குறித்த நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இலங்கைக்கான ஜப்பான் மற்றும் பிரான்ஸ் தூதுவர்கள், அமைச்சின் அதிகாரிகள், சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.