Thursday, January 28, 2021
Home கட்டுரை தமிழர்களின் இன்றைய போராட்டம் கற்றுத்தந்த பாடமும், முஸ்லிம் தலைவர்களின் வெளிநாட்டு உறவுகளும், ஜனாஸா எரிப்பும்

தமிழர்களின் இன்றைய போராட்டம் கற்றுத்தந்த பாடமும், முஸ்லிம் தலைவர்களின் வெளிநாட்டு உறவுகளும், ஜனாஸா எரிப்பும்

தமிழர்களுக்குள் எத்தனை கட்சிகள் இருந்தாலும், பொதுப் பிரச்சினைக்கு அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரண்டு மக்களை போராட்டத்திற்கு அழைத்ததானது தமிழ் தலைவர்களிடம் போர்க்குணமும், முற்போக்கு சிந்தனையும் உள்ளத்தில் பதிந்துள்ளதென்பதனை காட்டுகின்றது.

இன்று தமிழர்களின் ஒன்றுபட்ட போராட்டமானது சர்வதேசத்தை உசுப்பிவிட்டதுடன், இந்தியாவை இந்த பிரச்சினையில் தலையிட வைத்துள்ளது. இதனால் அரச இயந்திரத்தை ஆட்டம்காண செய்தது.

“நாங்கள் இதற்கு பொறுப்பல்ல உபவேந்தரே இதனை பார்த்துக்கொள்வார்” என்று அதிகார வர்கத்தினர் தப்பித்துக்கொள்ளும் சூழ்நிலையானது, குளிரூட்டிய அறைக்குள் இருந்துகொண்டு அரசியல் செய்யாமல் வீதியில் இறங்கி நடாத்திய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.

நினைவுத் தூபியை யார் உடைக்க உத்தரவிட்டாரோ, அவரது கரங்களினால் மீண்டும் நினைவுத் தூபி எழுப்புவதற்கு அடித்தளமிட்டதானது, கொதிநிலையில் இருந்த பிரச்சினையை தணிப்பதற்கான தற்காலிக முயற்சியா ? அல்லது எதிர்காலத்தில் நிரந்தர நினைவுத் தூபி எழுப்பப்படுமா ? என்பதனை காலங்கள் பதில் சொல்லும்.

ஆனாலும் நினைவுத் தூபி இரவோடிரவாக இடிக்கப்பட்டதும், முஸ்லிம் அரசியல்வாதிகள் போன்று “நாங்கள் அங்கே பேசியுள்ளோம், இங்கே பேசியுள்ளோம்” என்று தமிழ் தரப்பினரும் மக்களை ஏமாற்றுகின்ற அரசியலை செய்திருந்தால் இந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வு கிடைத்திருக்காது.

கொரோனாவில் மரணித்த ஜனாசாக்களை கடந்த மார்ச் மாதம் முதன் முறையாக எரித்தபோது முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக அப்போதே வீதிக்கு இறங்கி தொடர்ந்து அஹிம்சை போராட்டத்தினை மேற்கொண்டிருந்தால், அரசு ஆட்டம் கண்டிருக்கும். இதுவரையிலான 150 ஜனாசாக்கள் எரிக்கப்பட்டிருக்க வாய்ப்பிருந்திருக்காது.

முஸ்லிம்கள் தங்களது கையாலாகாத அரசியல்வாதிகளை முழுமையாக நம்பியதே அத்தனை பின்னடைவுக்கும் காரணமாகும். அத்துடன் எமது ஜனாசாக்கள் எரிக்கப்படுவதைவிட, அதனை எரிக்கின்ற ஆட்சியாளர்களின் கோரமுகத்தை நியாயப்படுத்துவதற்கென்று ஒரு கூட்டம் எம்மத்தியில் இருந்துகொண்டே இருக்கின்றது.

தமிழர்களுக்கென்று உலகில் நாடுகள் இல்லை. ஆனால் அவர்களின் பிரச்சினைக்காக குரல்கொடுக்க இந்தியா உற்பட பல ஐரோப்பிய நாடுகள் உள்ளன. ஆனால் முஸ்லிம்களுகென்று 54 க்கு மேற்பட்ட நாடுகள் உள்ளது. ஆனால் முஸ்லிம்களுக்காக குரல்கொடுக்க எந்தவொரு நாடும் இல்லை.

இதற்கு காரணம் என்ன?

தமிழ் தரப்பினர் இந்தியாவுடனும், ஏனைய மேற்கத்தேய நாடுகளுடனும் உறவுகளை பேணி வருவதுடன், தங்களது மக்கள் சார்ந்த பிரச்சனைகளை இதயசுத்தியுடன் வலியுறுத்திக்கொண்டே வருகின்றார்கள்.

ஆனால் முஸ்லிம் தரப்பினர் அவ்வாறில்லை. எந்தவொரு முஸ்லிம் அரசியல்வாதிகளும் மக்களின் பிரச்சனைகளை வெளிநாட்டு பிரமுகர்களுடன் இதயசுத்தியுடன் பேசியதில்லை.

சர்வதேசத்துடன் நெருக்கமான உறவுகளை பேணிவருவதாக அவ்வப்போது தலைவர்கள் புகைப்படத்தினை வெளியிட்டு தங்களது இமேஜை பாதுகாக்கின்றார்களே தவிர, இதனால் முஸ்லிம் மக்களுக்கு எந்தவித பிரயோசனமும் இல்லை.

முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு இருக்கின்ற வெளிநாட்டு உறவுகளை தங்களின் தனிப்பட்ட தேவைகளுக்கு பயன்படுத்துகின்றார்களா ? இல்லையா ? என்பது பற்றி தெரியவில்லை. ஆனால் முஸ்லிம்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் சர்வதேசத்தின் காதுகளுக்கு அழுத்தமாக கூறப்படவில்லை என்பது மட்டும் புரிகின்றது.

எனவேதான் வீதியில் இறங்கி அஹிம்சை வழியிலான போராட்டத்தின் மூலம் மட்டுமே தங்களது பிரச்சனைகளை தீர்க்க முற்படலாமே தவிர, முதுகெலும்பில்லாத அரசியல்வாதிகளின் அடிமைத்தனத்தினால் அல்ல என்பதனை தமிழர்களின் இன்றைய போராட்டம் பாடத்தினை கற்றுத்தந்துள்ளது.

முகம்மத் இக்பால்,
சாய்ந்தமருது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments