சம்மந்தனின் அரசியலமைப்பு யோசனைகள் நிறைவேறாது – பேராசிரியர் திஸ்ஸ விதாரன

0
10
புதிய அரசியலமைப்பின் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். தேசிய பாதுகாப்புக்கும் நாட்டின் இறையாண்மைக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தமிழ் தரப்பினரது  கோரிக்கைகள் காணப்பட வேண்டும்.

புதிய அரசியலமைப்பு தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தனின் யோசனை முரண்பாடுகளை தோற்றுவிப்பதுடன் நிறைவேறாத ஒன்றாகவே காணப்படுகிறது என  லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் லங்கா சமசமாஜ கட்சி கூட்டணியமைத்துள்ளது. கூட்டணிக்குள் உள்ள கட்சிகள் தனிப்பட்ட முறையிலும், கூட்டணி அடிப்படையிலும் புதிய அரசியலமைப்பு தொடர்பில் தமது கட்சி நிலைப்பாட்டை முன்வைத்துள்ளார்கள். லங்கா சமசமாஸஜ கட்சி சார்பில் கூட்டணியின் ஊடாக யோசனைகளை முன்வைத்துள்ளோம்.

புதிய அரசியலமைப்பில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.என்று புதிய அரசியலமைப்பு குறித்த யோசனையில் சுட்டிக்காட்டியுள்ளோம். தேசிய பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தமிழ் தலைமைகள் யோசனைகளை முன்வைக்க  வேண்டும்.

புதிய அரசியலமைப்பு குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் முன்வைத்துள்ள யோசனை முரண்பாட்டை தோற்றுவிக்கும் வகையில் காணப்படுகிறது. நடைமுறை தன்மைக்கு சாத்தியப்படாத வகையில் யோசனைகளை முன்வைப்பதால் தமிழ் மக்களுக்கு ஏதும் நன்மை கிடைக்கப் பெறாது என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். முரண்பாடற்ற வகையில் பெற்றுக் கொள்ள வேண்டிய விடயங்கள் குறித்து கவனம் செலுத்துவது அவசியமாகும்.

இனங்களுக்கு மத்தியில் தற்போதும் காணப்படும் இனப்பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பின் ஊடாக தீர்வு காண்பது கட்டாயமாகும்.இதற்கு சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் அறிக்கையை முழுமையாக செயற்படுத்த வேண்டும் என்பதை  சர்வக்கட்சி குழுவின் தலைவராக செயற்பட்டவர் என்ற ரீதியில் குறிப்பிட்டுள்ளேன்.சர்வக்கட்சி குழு தமிழ் தேசிய கூட்டமைப்பினரது பங்குப்பற்றல் இல்லாமல் சுமார் இரண்டரை வருட காலமாக பல தரப்பு மட்டத்தில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து அறிக்கை தயாரித்தது. அரசியல் மாற்றத்தை தொடர்ந்து அவை கவனத்திற் கொள்ளப்படாமல் போனது கவலைக்குரியது.

ஆகவே புதிய அரசியலமைப்பின் ஊடாக தேசிய நல்லிணக்கம் உறுதிப்படுத்த வேண்டுமாயின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதை அனைத்து தரப்பினரும் புரிந்துக் கொள்ள வேண்டும். தமிழ் தலைமைகள் தற்போது ஒரு சில விடயங்களில் விட்டுக் கொடுப்புடன் செயற்பட்டு தீர்வு காண ஒன்றினைய வேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here