Thursday, January 28, 2021
Home கட்டுரை கத்தாருக்கான தடை நீக்கமும் பின்னணியும்

கத்தாருக்கான தடை நீக்கமும் பின்னணியும்

கத்தார் நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த அனைத்துத் தடைகளும் நீக்கப்படுமென்று சவூதி அரேபியா உத்தியபூர்வமாக அறிவிப்புச் செய்தது.

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் இரானுவ மத்திய கட்டளை மையம் அமைந்துள்ள நாடு கத்தார். இந்த நாட்டின் மீது 2017 ஜூன் மாதம் சவூதி அரேபியா தலைமையில், பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து ஆகிய நான்கு அரபு நாடுகள் இராஜ்ய தடைகளை விதித்திருந்தன.

உலகிலுள்ள இஸ்லாமியத் தீவிரவாத இயக்கங்களுக்கு நிதியுதவி வழங்கி வருவதன் காரணமாக தீவிரவாதத்திற்கு கத்தார் அரசு துணை போகின்றதென்று பிரதானமான குற்றாச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

இதில் இஸ்ரேலுக்கெதிராகப் போராடி வருகின்ற ஹமாஸ், ஆப்கானிஸ்தானின் தலிபான்கள், யேமனின் ஹௌதி இயக்கம், எகிப்தின் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு மற்றும் அல் – ஜஸீரா தொலைக்காட்சி நிறுவனம் உட்பட உலகின் பல இயக்கங்களுக்கு கத்தார் அரசு நிதியுதவி வழங்கி வருவதாகவும் மற்றும் அல்-கொய்தா, இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) போன்ற சர்வதேச தீவிரவாத இயக்கங்களுக்காக நிதி திரட்டுபவர்களுக்கு எந்தவிதத் தடையும் விதிக்காமல் தாராளமாக கத்தார் அரசு அனுமதி வழங்கி வருவது மட்டுமல்லாது, குறிப்பிட்ட தீவிரவாத இயக்கங்களின் பிரமுகர்கள் கத்தாரில் சுதந்திரமாகச் செயல்பட்டு வருவதாகவும் சவூதி அரேபியா குற்றஞ்சுமத்தியிருந்தது. இந்த குற்றச்சாட்டினை அப்போது கத்தார் அரசு மறுத்திருந்தது.

பொருளாதாரத்தடை, வான்பரப்பு மற்றும் போக்குவரத்து உட்பட அனைத்துவிதமான இராஜ்யத் தடைகளையும் ஏற்படுத்தினால், வேறுவழியின்றி கத்தார் அரசு தங்களது நிபந்தனைகளுக்கு கட்டுப்படுமென்று குறித்த நான்கு அரபு நாடுகளும் திட்டமிட்டது.

ஆனால், ஈரான், துருக்கி, மொரோக்கோ உட்பட பல இஸ்லாமிய நாடுகள் கத்தாருக்கு உதவுவதற்கு அவசரகதியில் இயங்கியது. இதனை தடை விதித்த அரபு நாடுகள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

அத்துடன், இந்தத்தடையினால் எதிர்பார்த்த எந்தவித இலக்கினையும் அரபு நாடுகளினால் அடைந்து கொள்ள முடியவுமில்லை.

கத்தாருக்கெதிரான அரபுக்கூட்டணியில் குவைத் நாட்டையும் இணைத்துக்கொள்வதற்கு எடுக்கப்பட்ட சவூதி அரேபியாவின் முயற்சி தோல்வியடைந்ததுடன், இறுதிவரைக்கும் கத்தாருக்கும், ஏனைய அரபு நாடுகளுக்குமிடையில் குவைத் அரசு சமரச முயற்சியில் ஈடுபட்டு இறுதியில் அது பயனளிக்கவில்லை.

கத்தார் எப்போதும் ஈரானுடன் நெருக்கமான உறவுகளைப் பேணி வருவதானது, ஈரானின் எதிரி நாடுகளான அமெரிக்கா, இஸ்ரேல், சவூதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு உடன்பாடில்லை.

இவ்வாறான நிலையில், “ஈரான் மீது அமெரிக்கா குரோதத்துடன் செயற்படுகின்றது” என்று கத்தார் மன்னர் ஷேக் தமிம் பின் அல்-தானி அப்போது விமர்சித்ததானது, அமெரிக்காவைக் கோபமடையச் செய்தது.

இதனாலேயே கத்தார் மீது தடை விதிப்பதற்கு முன்பு அரபுக்கூட்டணியினர் விதித்திருந்த பதின்மூன்று நிபந்தனைகளுக்குப் பின்னணியில் அமெரிக்காவின் செல்வாக்கு இருந்தாக கூறப்பட்டது.

அது மட்டுமல்லாது, யேமன் நாட்டில் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணியில் ஆரம்பத்தில் அங்கம் வகித்து வந்த கத்தார் அதிலிருந்து திடீரென விலகியதானது, சவுதிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அரபு வசந்தம் உருவானதன் பின்பு அரபு நாடுகள் ஆதரவளித்து வந்த அமெரிக்கா சார்பான கூட்டணிக்கெதிரான அணியினருக்கு கத்தார் அரசு ஆதரவு வழங்கியது.

அந்த வகையில், லிபியாவில் 2011 இல் முகம்மர் கடாபியின் வீழ்ச்சிக்குப்பின்பு கலீபா ஹப்தார் தலைமையில் இயங்கும் இயக்கத்துக்கு எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் ஆதரவு வழங்கி வருகின்ற நிலையில், இதன் எதிரணியினருக்கு கத்தார் உதவி செய்தது.

மேலும், எகிப்தின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முன்னாள் அதிபர் முஹம்மட் முர்சி 2013 இல் பதவியிலிருந்து அகற்றப்பட்ட பின்பு எகிப்து மற்றும் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பினை (இஹ்வான்கள்) பயங்கரவாத அமைப்பாக அறிவித்திருந்த நிலையில், இந்த அமைப்பின் செயற்பாடுகளுக்கு பிரசாரத்தளமாக கத்தார் அமைந்திருந்தது.

அமெரிக்காவின் அரசியலில் ஏற்பட்ட மாற்றமே கத்தார் மீதான அனைத்துத்தடைகளையும் சவூதி அரேபியா திடீரென விலக்கிக்கொள்வதற்கான காரணமாகும்.

ஈரான் மீது அமெரிக்கா இராணுவ நடவடிக்கை எடுக்காதது, சவூதி அரேபியாவுக்கு வருத்தமாக இருந்தாலும், டொனால்ட் ட்ரம்பின் மருமகனான ஜெரால்ட் குஷ்னருடன் சவூதி இளவரசர் முகம்மத் பின் சல்மானுக்கு இருந்த நெருக்கமான உறவினைப் பயன்படுத்தி அமெரிக்காவை தனது தேவைக்கேற்ப சவூதி அரேபியா பயன்படுத்தியது.

ஆனால், அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிதாகத்தெரிவான ஜோ பைடனின் ஆட்சியில் முன்பு போல் சவூதி அரேபியாவினால் செல்வாக்குச் செலுத்துவது கடினமென்று ஊகித்ததன் காரணமாகவும், வளைகுடாப் பிராந்தியத்தில் ஈரானின் இராணுவப்பலம் ஓங்கியுள்ள நிலையிலும் தான் தனிமைப்பட்டு விடக்கூடாதென்ற வகையில் சவூதி அரேபியா கத்தாருடன் உறவினைப் பலப்படுத்த முயற்சித்துள்ளது.

கத்தாருக்கெதிரான தடை நீக்கத்தில் உடன்பாடு காணப்பட்ட விடயங்கள் வெளியே கூறப்படா விட்டாலும், சவூதி அரேபியாவினால் தடை விதிக்கப்பட்டிருந்த அல் – ஜஸீரா தொலைக்காட்சி நிறுவனம் மீண்டும் சவூதி அரேபியாவில் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

மொத்தத்தில் மூன்றரை ஆண்டுகள் கத்தாருக்கெதிரான தடைவிதிப்பில் அரபுக் கூட்டணியினர் எதனையும் சாதிக்கவில்லை. மாறாக, இதில் வெற்றியடைந்தது கத்தாரேயாகும்.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments