அமெரிக்கா மற்றும் பிரிட்டன் விதித்துள்ள பொருளாதாரத் தடையால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவின் புகழ்பெற்ற செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஹூவாய் ( Huawei ), நிதி நெருக்கடியை சமாளிக்கப் பன்றி வளர்த்தல் தொடர்பான தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது…
சீனாவின் ஹூவாய் நிறுவனம் செல்போன் தயாரிப்பு மற்றும் தகவல் தொடர்புத் தொழில்நுட்ப சாதனங்கள் தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழ்ந்தது. ஹூவாய் நிறுவனம் தயாரித்த ஹூவாய் மற்றும் ஹானர் பிராண்ட் ஸ்மார்ட் போன்கள் புகழ்பெற்றவை. 5ஜி தொழில்நுட்பத்திலும் சிறந்து விளங்கியது. இந்த சூழலில் தான் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் ஏற்பட்ட பிரச்னையில் சிக்கிக்கொண்டது ஹூவாய்.
சீன அதிபர் ஜீ ஜின்பிங்குக்காக ஹூவாய் நிறுவனம் கோடிக்கணக்கான அமெரிக்கர்களை வேவு பார்ப்பதாகவும், அதனால் அமெரிக்காவின் இறையாண்மை மற்றும் தேசியப் பாதுகாப்பு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி ஹூவாய் நிறுவனத்துக்குப் பொருளாதாரத் தடை விதித்தார், முன்னாள் அமெரிக்க அதிபரான டொனால்ட் ட்ரம்ப். இதையடுத்து, தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி பிரிட்டனும் ஹூவாய் நிறுவனத்தின் சேவைகளுக்குத் தடை விதித்தது. இதனால், கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது ஹூவாய் நிறுவனம்.