மொயீன் அலிக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் எவருக்கும் கொரோனா இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது .
இதனை அடுத்து மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான பயிற்சிகளில் ஈடுபடுவதற்கு இங்கிலாந்து அணியினர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கை வந்தடைந்த சொற்ப நேரத்தில் மொயீன் அலிக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது .
இதனை அடுத்து ஏனைய வீரர்களிடமிருந்து பிரிந்து ஹொட்டல் ஒன்றில் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் .
மொயீன் அலிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை காலியில் நடைபெறவுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சம் நிலவியது .
ஆனால் ஹம்பாந்தோட்டையில் அணியினர் கடைப்பிடித்துவரும் உயிரியல் பாதுகாப்பு குமிழி நெறிமுறைகளால் சுமுக நிலை ஏற்பட்டுள்ளது .
‘ மொயீன் அலியைத் தவிர்ந்த ஏனையவர்களுக்கு தொற்று இல்லை என்ற உறுதிப்படுத்தப்பட்ட நல்ல செய்தி கிடைத்துள்ளது .
எங்களால் மட்டுப்படுத்தப்பட்ட பயிற்சிகளை இன்று ( புதன்கிழமை ) பிற்பகல் ஆரம்பிக்க முடியும் ‘ என இங்கிலாந்து அணி பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார் .
மொயீன் அலியுடன் நெருக்கமாக இருந்த கிறிஸ் வோக்ஸுக்கும் தொற்று இல்லை என்பது பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது .
எனினும் அவர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் இருப்பார் எனவும் நாளைய தினம் அவருக்கு மூன்றாவது கொரோனா பரிசோ நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது .
இதேவேளை இலங்கை அணியினர் வெள்ளிக்கிழமை நாடு திரும்பி உயிரியல் பாதுகாப்பு குமிழிக்குள் பிரவேசிக்கவுள்ளனர் .
இங்கிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட இருதரப்பு மற்றும் ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் காலியில் ஜனவரி 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது .